வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மகேஷ் பாபுவை இயக்கப்போகும் ராஜமவுலி.. வில்லனாக களமிறங்கும் பிரபல தமிழ் நடிகர்

நான் ஈ என்ற படம் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் தான் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி. முதல் படம் முதல் தற்போது வரை இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதிலும் பாகுபலி படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு ராஜமெளலிக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.

பாகுபலி படத்திற்கு பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ராஜமெளலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ராஜமெளலி புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.

இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு வில்லனாக தமிழ் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விக்ரம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான், அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் வில்லனாக நடித்த நிலையில் தற்போது மீண்டும் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News