நீண்ட காலமாக சங்கர் எடுத்து வைத்திருந்த பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பாகுபலி படங்களின் மூலம் பந்தாடியவர்தான் ராஜமௌலி. தற்போது ஷங்கரை விட அதிக அளவு பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனராக ராஜமௌலி உள்ளார்.
பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு 400 கோடி பட்ஜெட்டில் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளதாம்.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ராஜமௌலி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணையும் செய்தியை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகுபலி படத்தில் வரலாறு கதை, ரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் கதை என வித்தியாச வித்தியாசமான படங்களை எடுத்து வரும் ராஜமௌலியின் மகேஷ்பாபு கூட்டணியில் வரும் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே கற்பனையில் மிதந்து வருகின்றனர்.
அதற்கான விடையை ராஜமௌலியின் தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிரிக்க காடுகளில் சாகசம் செய்யும் வீரனின் கதையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது அது சம்பந்தமான திரைக்கதையை தான் யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஹாலிவுட்டில் டார்ஸான் என்ற பெயரில் வெளியாகியுள்ள அதே படத்தின் கதையை தான் ராஜமௌலியும் அவரது தந்தையும் சேர்ந்து மீண்டும் சுட்டுள்ளனர் என இப்போதே சமூகவலைதளங்களில் கிண்டல் கேலிகள் அதிகமாகியுள்ளன. பாகுபலி படத்தின் பல காட்சிகள், ரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தின் போஸ்டர்களும் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.