Ullozhukku Movie Review: இந்த வருடம் மலையாளத்தில் அடுத்தடுத்து தரமான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் மஞ்சுமல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு, ஆடு ஜீவிதம், ஆவேசம் என அத்தனை படங்களும் வசூலை வாரி குவித்துள்ளன.
இதற்கு தமிழ் ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தற்போது மற்றொரு தரமான படம் வெளியாகி இருக்கிறது. கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் பார்வதி, ஊர்வசி நடிப்பில் மிரட்டி இருக்கும் உள்ளொழுக்கு தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
கதைப்படி குடும்ப கவுரவத்தை பெரிதாக பார்க்கும் குடும்பத்தில் பிறந்த பெண் தான் பார்வதி. அவர் வேறு மதத்தில் ஒருவரை காதலிக்கிறார். ஆனால் குடும்ப கட்டாயத்தின் காரணமாக ஊர்வசியின் மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
பிடிக்காத வாழ்க்கையாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் குடும்பம் நடத்துகிறார் பார்வதி. அப்போது அவருடைய கணவர் உடல்நல பிரச்சினை காரணமாக மரணம் அடைகிறார். அந்த சூழலில் கேரளாவில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில் அவர் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குடும்பமே தடுமாறுகிறது.
ஊர்வசி, பார்வதியின் மிரட்டல் நடிப்பு
அப்போது எதிர்பாராத பல்வேறு ரகசியங்கள் வெளி வருகின்றன. அதை ஊர்வசி, பார்வதி எப்படி எதிர்கொள்கிறார்கள்? சூழ்நிலை கைதிகளாக இருக்கும் பெண்களின் நிலைப்பாடு என்ன? என்பதை தான் இப்படம் காட்டுகிறது.
உண்மையில் ஊர்வசி நடிப்பை பற்றி சொல்ல வார்த்தை கிடையாது. இப்படி ஒரு நடிகை நமக்கு கிடைத்தது மிகப்பெரும் பெருமை தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் அசத்தல் நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்து விடுகிறார்.
அவருக்கு போட்டியாக பார்வதியும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பிடிக்காத கணவனுடன் வாழும் போதும், அவருடைய மரணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சனைகள், அதிர்ச்சிகள் என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தரமான நடிப்பை கொடுத்துள்ளார்.
அதிலும் இறுதி காட்சியில் வசனமே இல்லாமல் ஊர்வசி, பார்வதி இருவரும் முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்துவது அவ்வளவு எதார்த்தமாக உள்ளது. அறிமுக இயக்குனராக இருந்தாலும் கதையை கொண்டு சென்ற விதமும், எதிர்பார்த்த நடிப்பை நடிகர்களிடம் வாங்கி இருப்பதும் பாராட்ட வைத்துள்ளது. ஆக மொத்தம் உள்ளொழுக்கு – மாஸ்டர் பீஸ்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5