புதன்கிழமை, ஜனவரி 1, 2025

சமீபத்தில் வெளிவந்து இந்தியாவே திரும்பி பார்த்த 8 மலையாள படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள்

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பிறமொழி படங்களை பார்கின்றனர் அதிலும் மலையாள மொழி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திரில்லர், ரொமான்டிக், டிராமா என்று அனைத்திலும் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற படங்கள் நிறைய உள்ளது.

மலையாள மொழியில் இது போன்ற படங்களை பொழுதுபோக்கிற்காக தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசிக்கின்றனர் . ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

அய்யபனும் கோஷியும்: பிஜுமேனன், பிரித்திவிராஜ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் அய்யபனும் கோஷியும். இந்த படம் முழுக்க முழுக்க சுயமரியாதையை அசிங்கப்படுத்திய சமுதாயத்தில் எப்படி ஆபத்தாக முடிகிறது என்பதை தத்துரூபமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் சச்சு.

எக்ஸ் மிலிட்டரி ஆபீஸராக கௌசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரித்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் நாயராக பிஜுமேனன் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப் பட்டிருக்கும். மலையாள மக்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் அதிக அளவில் பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்படுகிறது.

அஞ்சாம் பத்திரா: மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், உன்னிமயா பிரசாத், ஜினு ஜோசப் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம்தான் அஞ்சாம் பத்திர. இந்த படம் முழுக்க முழுக்க சைக்கலாஜிக்கல்/ சீரியல் கில்லர் படம். ஒரு சீரியல் கில்லர் காவல்துறையினரை குறிவைத்து கொலை செய்வது தான் கதை தமிழில் வெளிவந்த ராட்சசன் படம் போல் இந்தப்படமும் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. குஞ்சாக்கோ போபன் ஒரு சைக்காலஜிஸ்டாக இந்த படத்தில் மிரட்டி இருப்பார் என்றே கூறலாம்.

டிரான்ஸ்:

அன்வர் ரஷித் இயக்கத்தில்ஃப்கத் பாசில்,நஸ்ரியா தம்பதி இணைந் திருக்கும் படம் என அறிவித்த நாள் முதலே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘டிரான்ஸ்’. நாத் பாசி, விநாயகன், கெளதம் வாசுதேவன், செம்பன் வினோத், திலீஷ் போத்தன் எனப் பலர் இந்தப் படத்தில் இருந்தாலும் ஃபகத் என்னும் கலைஞனே படம் முழுவதும் மிரட்டி இருப்பார். சைக்காலஜிக்கல் டிராமா கலந்த இந்த படம் தமிழ் மக்களிடமும் மாபெரும் வெற்றி பெற்றது.  நல்ல வரவேற்பை பெற்ற படம் இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்படுகிறது.

வரனே அவஷ்யமுண்டு:

சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷினி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் வரனே அவஷ்யமுண்டு. ரொமான்ஸ், டிராமா, ஃபேமிலி சென்டிமென்ட், ரெலேஷன்ஷிப் என்று அனைத்தையும் மிக அற்புதமாக இயக்கியிருப்பவர் சத்யன். தாயும், மகள் நிகிதா அதாவது கல்யாணி பிரியதர்ஷினியும் ஒரு புது அபார்ட்மெண்டுக்கு செல்கின்றனர், அங்கு இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனை கொடுப்பதற்காக ஒருவர் உள்ளே வருகிறார். இதைவைத்து கதை நகரும் இந்தப்படமும் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான்.

கப்பெல்லா:

முகமது முஸ்தபா இயக்கத்தில் ரோஷன் மேத்யூ, அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி ஆகியோர் நடித்து நெடிப்பிலிக்ஸில் வெளியான ‘கப்பெல்லா’ தான் சிறந்த மலையாள படமாக பார்க்கப்படுகிறது. காமுகன் காசியாகட்டும், பொள்ளாச்சி விவகாரம் என எவ்வளவு விஷயம் நாம் கேள்விப்பட்டாலும், ஆண்களின் ஏமாற்று வலையில் சிக்கி பெண்கள் சின்னாபின்னம் ஆகும் சம்பவங்கள் தினம்தோறும் நடந்து தான் வருகின்றது. அப்படி ஒரு நிகழ்வை நம் கண்முன்னே ஸ்க்ரீனில் கொண்டுவந்துள்ளது இப்படக்குழு. பள்ளி மாணவர் , மாணவியர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

ஃபாரன்ஸிக்:

அக்ஹில் பவுல், அனஸ் கான் இயக்கத்தில் டோவினோ தாமஸ்,மம்தா மோகன்தாஸ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற நம்பர்-1 மலையாள படமாகப் பார்க்கப்படுகிறது ஃபாரன்ஸிக். சீரியல் கில்லரைக் கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி, ரித்திகா சேவியர் (மம்தா மோகன்தாஸ்). அவருக்கு உதவியாக நியமிக்கப்படுகிறார், மருத்துவ சட்ட அலோசகரும் தடயவியல் நிபுணருமான சாமுவேல் ஜான் கூட்டக்காரன் (டொவினோ தாமஸ்). தனியாக இருக்கும் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்து, ஓர் இடத்தில் பிணமாக வீசி, காவல்துறையினருக்கு டார்ச்சர் கொடுக்கிறான் ஒரு சைக்கோ கொலையாளி.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்:

பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கத்தில் சுராஜ் வெஞ்சரமூடு,ஷாபின் சஹீர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படமாகப் பார்க்கப்படுகிறது ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். ஒரு தந்தை மகனுக்கான பாசம், பிரிவு, சந்தோஷம் அனைத்தையும் மிக அற்புதமாக கையாண்டிருப்பார் இயக்குனர். இவர்களுக்கு இடையே வரும் ரோபோட், அதன்மேல் தந்தை காட்டும் அன்பு, கடைசியில் அது ஒரு மிஷின் என்றும் புரிய வைப்பதற்காக மகன் போராடும் போராட்டம் என்று தத்துரூபமாக காட்சிகள் அமைக்கப்பட்டு மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

டிரைவிங் லைசென்ஸ்

லால் இயக்கத்தில் பிரித்திவிராஜ், சுராஜ் வெஞ்சரமூடு போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2019 வெளிவந்து வெற்றி பெற்ற படம் டிரைவிங் லைசென்ஸ். ஒரு நடிகன் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்காக அதற்கான அதிகாரியை சென்று பார்க்கும்போது, அவமானங்களை சந்திக்கிறார். தீவிர ரசிகனாக அந்த அதிகாரி இருந்தாலும் கூட தன்மானத்தை விடாமல் மீண்டும் மீண்டும் அந்த நடிகனுக்கு குடைச்சல் கொடுப்பது போன்று கதைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

யதார்த்தமான வாழ்க்கையில் ஒரு பிரபல நடிகர் அனுபவிக்கும் கஷ்டத்தை மிக அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார்கள். அதாவது எலியும் பூனையுமாக சண்டை போடுவது, ஒரு நடிகன் மேல் உயிரையே வைத்திருக்கும் ரசிகன் செய்யும் காட்சிகள், வெறித்தனமான ரசிகர்கள் என்று இந்த படத்தில் விறுவிறுப்பாக இருக்கும்.

இப்படி தமிழ் மக்களையும், மலையாள மக்களையும் இணைப்பதற்காக இந்த சினிமா ஒரு பாலமாக உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் தமிழ்மொழியை மலையாள மக்கள் ரசிப்பதும், மலையாள மொழியை தமிழ் மக்கள் ரசிப்பதையும் பார்த்து மற்ற மொழி மக்கள் பொறாமை தான் படுகின்றனர்.

Trending News