Kannur Squad Movie Review: பொதுவாகவே மலையாளத்தில் திகில் மற்றும் திரில்லர் படங்கள் வேற லெவலில் இருக்கும். அப்படி ஒரு கதையம்சத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் தான் கண்ணூர் ஸ்குவாட். ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்மூட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இப்படம் 100 கோடி வரை வசூலித்து மிரள விட்டிருந்தது.
தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. அதன் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம். பட டைட்டிலை பார்த்ததுமே அனைவருக்கும் புரிந்து இருக்கும் இது எந்த மாதிரியான கதைகளம் என்று. கண்ணூர் ஸ்குவாட் என்ற குழுவில் இருக்கும் நான்கு பேர் எப்படிப்பட்ட க்ரைம் நடந்திருந்தாலும் அதை கண்டறிவதில் திறமையானவர்கள்.
சில காரணங்களால் கலைக்கப்பட்ட அந்த குழு ஒரு குற்ற சம்பவத்தை கண்டறிய ஒன்று சேர்கிறது. அதாவது பிரபல தொழிலதிபர் வீட்டிற்குள் நுழையும் கொள்ளை கும்பல் அவரை கொன்றுவிட்டு பணம் நகையை திருடி செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் தொழிலதிபரின் மனைவி, மகன், மகள் ஆகியோரும் பலத்த காயமடைகின்றனர்.
முதல்வர் வரை செல்லும் இந்த பிரச்சனை மம்மூட்டியின் கைக்கு வருகிறது. அவர் தன் குழுவினரோடு குற்றவாளிகளை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று சாயலில் இருக்கும் இப்படம் ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக நகர்கிறது. இதுவே நம்மை கதையோடு ஒன்ற செய்து விடுகிறது.
அதைத்தொடர்ந்து கொள்ளை கும்பல் நடத்தும் மூர்க்கத்தனமான குற்றத்தை பார்ப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். அதை மம்மூட்டி திறமையாக கண்டறிவதும், ஒரு சிறு குறிப்பு வைத்துக் கொண்டு வடநாடு வரை அவர் செல்வதும் காவல்துறையின் நிதர்சனத்தை புரிய வைக்கிறது. அதேபோன்று குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் காவலர்கள் எந்த அளவுக்கு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
Also read: கமலிடம் ரெண்டு நிபந்தனையை வைத்த மம்மூட்டி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
அதற்கு பக்காவாக பொருந்தி போகும் மலையாள சூப்பர் ஸ்டாருக்கு 72 வயது என்று சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. அந்த அளவுக்கு அவர் படத்தை தோளில் தாங்கி மிரட்டி இருக்கிறார். அதேபோன்று நொடிக்கு நொடி பரபரப்பும் திகிலும் கலந்து நகரும் திரைக்கதை ரசிகர்களுக்கான ட்ரீட் என்றுதான் சொல்ல வேண்டும். ஆக மொத்தம் இந்த கண்ணூர் ஸ்குவாட் – திகில் பயணம்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5