Manjummel Boys Movie Story Review: இந்த வாரம் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மொழிகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது இந்த படத்தின் திரைக்கதை விமர்சனம் என்ன என்பதை பார்ப்போம். 2006ம் ஆண்டு நடப்பது போல் இந்த படத்தின் கதையை அமைத்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்தில் இருக்கும் மஞ்சும்மல் பகுதியை சேர்ந்த 11 நண்பர்கள் ‘மஞ்சுவல் பாய்ஸ்’ என்ற கிளப்பை அமைத்து ஜாலியாக வாழ்கிறார்கள். இவர்கள் ஓணம் விடுமுறைக்கு கொடைக்கானலுக்கு விசிட் அடிக்கிறார்கள். அங்கே குணா குகையில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சுற்றிப் பார்க்க செல்லும் போது, மாட்டிக் கொள்கிறார்கள்.
எதிர்பாராத விதமாய் அங்கு இருக்கும் ‘சாத்தானின் சமையலறை’ எனக் கூறப்படும் பல அடி ஆழமுள்ள பயங்கரமான குழிக்குள் ஒருவர் விழுந்து விடுகிறார். அவரை மீட்க நண்பர்கள் நடத்தும் போராட்டமே மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் திரைக்கதை. நகைச்சுவையை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு நேர் எதிர் உணர்வான அச்சத்தையும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற போராட்டத்தையும் எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதை இந்த ஒரே படத்தில் கச்சிதமாக இயக்குனர் சிதம்பரம் காட்டிவிட்டார்.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் ஸ்டோரி ரிவ்யூ
இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி, தரமான சர்வைவல் திரில்லராக படத்தை எடுத்துள்ளனர். என்னதான் இந்த படம் மலையாள படமாக இருந்தாலும், படத்தில் 60% தமிழில் தான் பேசுகின்றனர். இதனால் தமிழகத்தில் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த படம் பெருமளவில் சினிமாத்தனம் இல்லாமல் தரமான மேக்கிங்கில் சேட்டன்கள் வழக்கம்போல் மிரட்டி உள்ளனர்.
இதில் ஒரு டஜன் நடிகர்கள் நடித்திருந்தாலும் அனைவரது நடிப்பும் இயல்பாக, 360 டிகிரி கேமராவில் படம் பிடிக்கப்பட்டது போன்ற உணர்வை வெளிப்படுத்தியது தான் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு. அதேபோல் டெக்னிக்கல்லிலும் பரபரப்பான திரைக்கதை அம்சத்திலும் படக்குழுவினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
இந்த படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே குவிவதால் தமிழகத்திலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சப் டைட்டிலுடன் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு அதிகம் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது. அதோடு இந்த படத்தில் கமலின் குணா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடலை பயன்படுத்தி இருப்பதால், தமிழ் ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்– 3.25
Also Read: Siren Movie Review – ஆடு புலி ஆட்டம் ஆடும் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்.. சைரன் முழு விமர்சனம்