சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவரும் ஒரு படத்தில் நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். அதிலும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர்களுக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கிறார்கள்.
மேலும் முன்னணி நடிகர்களாக இருக்கும் கமல், ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்கள் அனைவரும் சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் அடுத்தடுத்து படங்கள் நடிக்கிறார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.
பல படங்களில் நடித்து வாங்கும் சம்பளத்தை ஒரே படத்தில் நடித்து வாங்கி விடலாம் என்பதே அந்த நடிகர்களின் எண்ணம். இதனாலேயே அவர்கள் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சாதாரண தயாரிப்பாளர்களால் ஹீரோவுக்கு மட்டுமே 100 கோடி சம்பளம் கொடுப்பது என்பது முடியாத விஷயம். இது தவிர படத்தின் இதர செலவுகளையும் அவர்களால் சமாளிக்க முடியாது. அதனால் ஹீரோக்கள் எதிர்பார்க்கும் இவ்வளவு கோடி சம்பளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.
மேலும் பல கோடி செலவு செய்து படத்தை புரமோஷன் செய்யவும் இந்த நிறுவனங்கள் மட்டுமே முடியும். இதன் மூலம் ஒரு படத்தை தயாரிக்கும் செலவை விட அதிக மடங்கு லாபத்தை அவர்கள் பெற்று விடுவார்கள்.
அதனால்தான் அஜித், போனி கபூரின் தயாரிப்பில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், எந்திரன், அண்ணாத்த திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிப்பதற்கு பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்.