விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 13-ஆம் தேதி என்பதை படக்குழுவினர் பட்டி தொட்டியெங்கும் பரப்பி வருகின்றனர். ஆனால் திடீரென வெளியான கோர்ட் அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ளது படக்குழு.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் மெல்ல மெல்ல ஜனவரி மாதத்தை நோக்கி வந்துள்ளது. இறுதியில் படத்தின் ரிலீஸ் தேதியும் குறித்து விட்டனர். வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் கோலாகலமாக வெளியாக உள்ளது.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முதன்முறையாக விஜய் படம் உருவாகியுள்ளது. இதனால் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரைப்படங்களில் மாஸ்டர் படமும் ஒன்றாக மாறியுள்ளது. இது ஒருபுறமிருக்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற உத்தரவு பிறப்பித்ததை படக்குழுவினரை உச்ச சந்தோஷத்தில் இருந்தனர்.
இதனால் ரிலீஸ் வேலையை விறுவிறுப்பாக செய்து வந்த படக்குழுவினருக்கு தற்போது பெருத்த அடி விழுந்துள்ளது. விஜய் படம் என்றாலே சில சமூக ஆர்வலர்கள் குட்டையைக் குழப்ப வந்துவிடுவார்கள். அந்த வகையில் மதுரையில் மாஸ்டர் ரிலீஸ் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிபதிகள் வருகின்ற ஜனவரி 11-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட வேண்டும் எனவும், திங்கட்கிழமை மத்திய அரசுடன் பேசி அடுத்த கட்ட அறிவிப்பை வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடைசி நேர சிக்கலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறது மாஸ்டர் படம். என்ன நடந்தாலும் ஜனவரி 13-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக வேண்டும் என முழு மூச்சுடன் வேலை செய்கிறாராம் தயாரிப்பாளர். விஜய் படங்களுக்கு முதலில் எதிர்ப்பு வருவதும் பின்னர் அடங்கிப் போகும் வழக்கம் தானே என்கிறார்கள் ரசிகர்கள்.