வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அஜித்தின் அடுத்தடுத்த படங்களை கைப்பற்றும் தெலுங்கு சினிமா.. பட்டைய கிளப்பும் மெகா ஸ்டார்

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் மற்ற மொழிகளில் அதிக அளவில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் அதிக அளவில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. பிற மொழி நடிகர்களும் தமிழ் படங்களின் ரீமேக்கில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவி சமீபகாலமாகவே ரீமேக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழ் படங்களின் ரீமேக்கில் அதிக அளவில் நடித்து வருகிறார். ஏற்கனவே விஜய் நடிப்பில் தமிழில் வெளியான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார்.

தற்போது அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இவருக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதுமட்டுமின்றி மலையாளத்தில் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார். மோகன்ராஜா இயக்கி வரும் இப்படத்திற்கு காட்பாதர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வரும் சிரஞ்சீவி இப்படத்திற்கு பொருத்தமான இயக்குனரை தேடி வருகிறாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News