வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வாலியின் பாடலை தூக்கி எறிந்த எம்ஜிஆர்.. விஷயத்தை போட்டுடைத்த வைரமுத்து

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த ஒரு இடையூறும் செய்யாமல் நடித்து வந்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மீறி தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் வந்து விட்டாலோ அல்லது மாஸ் நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்து விட்டாலோ அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக படம் தொடர்பான விஷயங்களில் தலையிட ஆரம்பித்து விடுவார்கள்.

படத்தில் இந்த சீன் இப்படி இருக்க வேண்டும், இசையமைப்பாளர் இப்படித்தான் இசையமைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் தனக்கு ஏற்றாற்போல் பாடலாசிரியர் இப்படித்தான் பாடலை எழுத வேண்டும் என்று கூறியவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் தனக்கு போட்டியாக இருக்கும் நடிகரை தாக்கி பாடல்களை எழுத சொல்லிய சம்பவங்களும் உண்டு.

ஆனால் அதற்கு நேர்மாறாக எம்ஜிஆர் தனக்கு போட்டியாக இருந்த சிவாஜியை எந்த அளவிற்கு மதிப்புடன் நடத்தியுள்ளார் என்பதைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அன்றைய காலத்தில் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும்தான் சினிமாவின் இரு துருவங்களாக இருந்தனர்.

கமல், ரஜினிக்கு இருப்பது போன்று அவர்களுக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்தது. படம் தொடர்பாக எவ்வளவு தான் அவர்களுக்குள் போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வந்தனர். அப்படி ஒருமுறை எம்ஜிஆர் அறக்கட்டளை என்னும் படத்தில் நடித்தபோது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அந்த படத்திற்கு கவிஞர் வாலி பாடல் எழுதியுள்ளார். அப்போது அரசகட்டளை முன்னாலே என் அறக்கட்டளை என்ன ஆகும் என எழுதியிருந்தார். இந்த பாடல்வரிகளை பார்த்த எம்ஜிஆர் கோபப்பட்டு அந்த பேப்பரை தூக்கி எறிந்துள்ளார்.

ஏனென்றால் அப்போதுதான் சிவாஜி ஆண்டவன் கட்டளை என்னும் படத்தில் நடித்தார். அவரை தாக்கும் விதமாக வாலி இதுபோன்று பாடல் எழுதியதால் எம்ஜிஆர் மிகவும் கோபப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தை கவிஞர் வைரமுத்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர்களின் நட்புக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கிறது. இதன் மூலம் எம்ஜிஆர், சிவாஜியின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. மேலும் சிவாஜியின் நடிப்பைப் போல் யாராலும் நடிக்க முடியாது என்று எம்ஜிஆர் அடிக்கடி அவரை பாராட்டுவாராம்.

Trending News