தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா சினிமா துறைகளிலும் வாரிசு நடிகர்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோல் முகவரியோடு வந்து சினிமா துறையில் மின்னுபவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். இதற்குக் காரணம் அவர்களது நேரமா அல்லது விதியா என்று இன்றுவரை யாராலும் கணிக்க முடியவில்லை.
ஆனால் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக தளபதி விஜய், சூர்யா, கார்த்தி போன்ற சில நடிகர்கள் மட்டும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாறி, ராஜ நடை போட்டு கொண்டு இருக்கிறார்கள். மேலும் முகவரியோடு வந்து வெற்றி பெற்றவர்களை விட, காணாமல் போன வாரிசு நடிகர்களின் எண்ணிக்கைதான் கோலிவுட்டில் அதிகமாக உள்ளது.
அந்த வகையில் கோலிவுட்டில் காணாமல் போன வாரிசு நடிகர்களின் லிஸ்ட் இதோ:
ஆனந்த் பாபு: தமிழ் சினிமாவின் இமயமான நாகேஷின் மகன் தான் ஆனந்த் பாபு. இவர் நடித்த முதல் படம் ‘டான்ஸர்’ வெற்றிப்படம் ஆனதால் அனைவருக்கும் ஆனந்த் பாபு மீது பெரிய நம்பிக்கை உருவானது.
ஆனால் ஆனந்த் பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் சினிமா வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவரால் கொடி கட்டி பறக்க முடியவில்லை.
பிருத்விராஜன்: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன். இவர் தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த ‘கைவந்த கலாய்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனாலும் தற்போது வரை சினிமா துறையில் தனது தந்தை போன்ற தனியொரு அந்தஸ்தை பிடிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
சக்தி வாசு: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனரான பி வாசுவின் மகன் சக்தி வாசுதேவன். இவர் தனது தந்தை இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வெளியான ‘தொட்டால் பூ மலரும்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கோலிவுட்டில் அறிமுகமானார். ஆனாலும் இன்று வரை சக்தி சொல்லிக்கொள்ளும் வகையில் சினிமா துறையில் எந்த ஒரு பெரிய சாதனையும் புரியவில்லை.
பூபதி: கோலிவுட்டின் பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் தான் பூபதி. மேலும் மனோரமா பூபதியை நடிகனாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இவ்வளவு ஏன் சொந்த தயாரிப்பில் விசுவின் இயக்கத்தில் ஒரு படத்தைக்கூட மகனை ஹீரோவாக வைத்து தயாரித்தார். ஆனாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதற்கு மிக முக்கிய காரணம் பூபதியின் மதுப்பழக்கம் தான் என்றும் சொல்லப்படுகிறது.
கார்த்திகா நாயர்:
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான ராதாவின் மகள்தான் கார்த்திகா. இவரது நடிப்பில் வெளியான முதல் படமே செம ஹிட்டானதால் கார்த்திகாவின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு இவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.