திரெளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதலை மையமாக வைத்து வெளியான திரெளபதி படம் கோலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளையும் சந்தித்தது. இருப்பினும் படம் வியாபார ரீதியாக வெற்றியே பெற்றது.
தற்போது இயக்குனர் மோகனின் அடுத்த படைப்பு தான் ருத்ர தாண்டவம். இப்படம் வெளியாகும் முன்பே சர்ச்சையை சந்தித்துள்ளது. அதுவும் சாதாரண சர்ச்சை அல்ல மதம் தொடர்பான சர்ச்சையை சந்தித்துள்ளது. சமீபத்தில் ருத்ர தாண்டவம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் இயக்குனர் மோகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, எனது கிறிஸ்தவ பாதிரியார் நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம் சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்துவிடுவோம், வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கின்றன. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியலும், மிகப் பெரிய சதித்திட்டமும் உள்ளது. இவையெல்லாம் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
நம்முடன் இருந்துகொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதுவரை உண்மையான கிறிஸ்தவர்கள் இருந்த நிலையில், தற்போது திடீரென ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்தவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் நம்மை நோக்கிக் கேள்வி கேட்கிறார்கள் என கூறினார். இதுதான் ருத்ர தாண்டவம் படம் உருவான கதை என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் மோகன் இவ்வாறு பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, மிகவும் எளிமையாக இந்து மதத்தை சாடுகிறார்கள். இந்து என்பது ஒரு மதமே அல்ல. அவர்கள் வணங்குவது கடவுள் அல்ல சாத்தான் என கூறுகிறார்கள். இது எனக்கு தவறாக தோன்றியது. இதைத்தான் நான் எனது ருத்ர தாண்டவம் படத்தில் காட்டியுள்ளேன். இதை தான் மேடையிலும் கூறினேன் என கூறியுள்ளார்.