தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் மைக் மோகன் மிகவும் பிரபலம். இவரது படங்கள் மற்றும் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் என அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. அதுமட்டுமல்லாமல் ரஜினி கமலுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. பல ஹிட் படங்களை கொடுத்த மோகன் திடீரென ஒரு நாள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் தான் கடந்த 2008ஆம் ஆண்டு சுட்டப்பழம் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனையடுத்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது புதிய படம் மூலம் மோகன் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதன்படி தமிழில் தாதா 87 படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்ற படத்தில் மோகன் நடிக்கிறார். புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படம் மூலம் பழைய மோகனை பார்க்க முடியுமா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.
ஹரா என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மோகன் மிரட்டலான லுக்கில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் போஸ்டரில் கோயில், சென்னை ரயில் நிலையம், மசூதி, தாஜ்மஹால், கலவரம், ஆம்புலன்ஸ், போலீஸ் போன்ற குறியீடுகள் இடம்பெற்றிருப்பதால், சாதி மற்றும் மத அரசியலை பேசும் படமாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.
மேலும் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ, “இந்த படத்தின் கதை மிகப்பெரிய விஷயத்தை பேசப் போகிறது. இப்போதைக்கு இதை மட்டும் தான் கூற முடியும். வேறு எதையும் கூற முடியாது” என கூறியுள்ளார். எனவே நிச்சயம் இப்படம் சர்ச்சைக்குள்ள ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி தான் பேசப்போகிறது என்பது உறுதியாகி விட்டது.