சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சாதித்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தனது திறமை மற்றும் விடா முயற்சி காரணமாக தடைகளை தாண்டி சாதித்த சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது.
இதனை தொடர்ந்தது இவரது மார்க்கெட் எகிறியதோடு, பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை உள்ளிட்ட படங்கள் உள்ளன. இதுதவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பைலிங்குவல் படமாக உருவாகும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதிக பட்ஜெட் காரணமாக சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படம் ஒன்று டிராப்பாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்திற்கான அறிவிப்பு 2019ஆம் ஆண்டே வெளியானது.
ஆனால் தற்போது படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாக கூறி படத்தை கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்காகவே ஸ்பெஷலாக விக்னேஷ் சிவன் எழுதிய இந்த படம் ஒரு பேண்டசி கதையாம். இதில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
கதைப்படி மொபைல் போனில் இருக்கும் கேட்ஜெட்ஸ் வழியாக சிவகார்த்திகேயன் 2030ஆம் ஆண்டிற்கு டைம் டிராவல் செய்வாராம். இதற்காக அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இதற்கான செலவுகள் அதிகமாக இருந்துள்ளது. அதனால் படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 80 கோடிக்கு சென்றுள்ளது. இந்த அளவிற்கு அதிக பட்ஜெட்டில் படத்தை இயக்க முடியாது என்று கூறி படத்தை கைவிட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.