தமிழ் சினிமாவில் தமிழ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மலையாளத்திலிருந்து புதுப்புது நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா கூட மலையாள நடிகை தான். ஏற்கனவே தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் உள்ள நிலையில் தற்போது மலையாள நடிகர்களும் தமிழ் பக்கம் வரத் தொடங்கியுள்ளனர்.
அதற்கேற்றார்போல் மலையாள நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. தளபதி படம் தொடங்கி தற்போது வரை கேரள நடிகர்கள் தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது அனைத்து படங்களும் தமிழிலும் ரிலீஸ் செய்யப்படுகின்றன. நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் துல்கர் சல்மான். 2020 ஆம் ஆண்டு தமிழில் துல்கர் சல்மான் நடித்து வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அதேபோல் இந்த லாக்டவுனில் அதிகமாக ஒடிடியில் படங்களை ரிலீஸ் செய்தவர் நடிகர் பகத் பாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ் படங்களிலும் கவனம் செலுத்துகிறார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நேரம் படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான நிவின் பாலி, ரிச்சி என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இவர் நடிக்கும் தமிழ் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராவணன், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் என்று பல தமிழ் படங்களில் நடித்தவர் பிரித்திவிராஜ். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் படங்களின் கதைகளை கதை கேட்டு வருகிறார்.
இவர்களைப் போலவே தமிழ் நடிகர்களுக்கும் கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் படங்கள் கேரளத்தில் நன்றாக வசூல் செய்யக்கூடியவை. அதுவும் குறிப்பாக விஜய், சூர்யா படங்கள் கேரளத்தில் உள்ள மாஸ் ஹீரோக்களின் படங்களை காட்டிலும் அதிக வசூல் சாதனை படைக்கின்றன.