வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சமந்தாவை தவிர்க்கும் நாகார்ஜுனா.. பூகம்பமாக வெடிக்கும் பிரச்சனை.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் பெண்ணான இவர் தெலுங்கு சினிமாவில் தனது வெற்றிக் கொடியை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், தெலுங்கு தேசத்திற்கு மருமகளாகவும் சென்றுள்ளார். சென்னை பெண்ணாக சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்ப காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் சமீபகாலமாக தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் மிகவும் ஹாட் டாப்பிக் என்றால் அது சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரச்சினை தான். இவர்கள் இருவர் குறித்த பல்வேறு செய்திகள் மீடியாக்களில் உலா வருகின்றன.

திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் அதிக கவர்ச்சி காட்டி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் அளவுக்கு மீறிய கவர்ச்சியில் நடித்திருந்தார். இதனால் சமந்தாவிற்கும் அவரது மாமனார் நாகார்ஜுனா குடும்பத்திற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இனி இதுபோன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது என கண்டித்ததாகவும் தெரிகிறது.

தற்போது சமந்தா தெலங்கானாவில் உள்ள கிராமப்பகுதி ஒன்றில் தனது தோழி குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சமந்தா தனது மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்த நாளுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த சில முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு நன்றி தெரிவித்த நாகார்ஜுனா, சமந்தாவின் வாழ்த்துக்கு இதுவரை எந்தவொரு பதிலும் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே இவர்களது குடும்பத்தில் பிரச்சினை நிலவி வரும் நிலையில், தற்போது நாகார்ஜுனாவின் இந்த செயல் மீடியாவிற்கு தீனி போட்டது போல் அமைந்து விட்டது. அனைத்து தெலுங்கு மீடியாக்களும் தற்போது இந்த செய்தியைத் தான் எழுதி வருகிறார்கள்.

இதுமட்டுமின்றி தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை விரைவில் தொகுத்து வழங்க உள்ள நாகார்ஜுனா, பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளாராம். இந்நிலையில், அதில் நாக சைதன்யா, சமந்தா பற்றி கேள்வி எழுந்தால் என்ன செய்வதென யோசித்து வருகிறாராம்.

samantha
samantha

Trending News