வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நயன்தாராவுக்கு பதில் சந்திரமுகி 2ல் நடிக்கும் பிரபல நடிகை.. திருமணத்திற்குப் பிறகு கைநழுவிப் போகும் வாய்ப்புகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, பிளாக் ஆபீஸில் ஹிட் அடித்த திரைப்படம் தான் வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் 17 வருடங்கள் கழித்து இரண்டாம் பாகத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் தோட்டக்கார பேத்தி துர்கா கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா, சந்திரமுகி 2ம் பாகத்திலும் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு பதில் அந்த கேரக்டரில் மகிமா நம்பியார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் மலையாள நடிகையாக தமிழ் சினிமாவிற்கு சாட்டை படத்தின் மூலம் 12-வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அறிவழகி ஆக ரசிகர்களை கவர்ந்தவர். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் மகிமா நம்பியார், தற்போது சந்திரமுகி 2 படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்கப்போகிறார்.

கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவார் என நினைத்த நிலையில், அதற்கு மாறாக பட வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

பெரும்பாலும் பாலிவுட்டில் திருமணமாகி 35 வயதைக் கடந்தாலும் அங்கு கதாநாயகிகளுக்கு மவுசு அதிகம். ஆகையால் பட வாய்ப்புகள் வராததால் தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு, பாலிவுட்டில் நிரந்தரமாக தங்கி விட நயன் திட்டமிட்டிருக்கிறார்.

மேலும் லைக்கா நிறுவனம் தயாரித்து, வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ரஜினி மீண்டும் 2ம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்காததால், அவருக்கு பதில் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

முனி, காஞ்சனா போன்ற பேய் படங்களில் மிரள விட்ட ராகவா லாரன்ஸ் இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என படக்குழு தேர்வு செய்திருக்கிறது. இதில் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னிலையில் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் இன்று துவங்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பிற்கு முன் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். எனவே சந்திரமுகி படப்பிடிப்பை துரிதமாக முடித்து விரைவில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

Trending News