தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தீவிரமாக காதலித்து வந்தார். பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த ஜோடியின் திருமணம் இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த ஜோடியின் திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கிட்டத்தட்ட 20 புரோகிதர்கள் கலந்து கொண்டு இந்தத் தம்பதிகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

அதில் திருத்தணி, கபாலீஸ்வரர், திருவண்ணாமலை, காளிகாம்பாள் உள்ளிட்ட பல கோவில்களில் இருந்தும் புரோகிதர்கள் வந்துள்ளதாக தெரிகிறது. அவர்களின் முன்னிலையில் இந்த தம்பதிகளின் திருமணம் படுஜோராக நடந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இவர்களுடைய திருமணம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவை கலக்கி வந்தது.

அந்த வகையில் இன்று நடைபெற்றுள்ள இந்த திருமண கொண்டாட்டத்தின் போட்டோக்கள் தற்போது அடுத்தடுத்து வெளிவர ஆரம்பித்துள்ளது. அதில் தற்போது வெளியாகியிருக்கும் போட்டோ பலரையும் கவர்ந்துள்ளது. அதில் பெரியவர்கள் அட்சதை தூவ விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறார்.

பல வருட கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் நயன்தாரா ஆனந்த கண்ணீருடன் அந்த தாலியை தலைகுனிந்து ஏற்றுக் கொள்வது போன்று இருக்கும் அந்த போட்டோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த போட்டோவை பார்த்த பிரபலங்கள் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த திருமணத்தை முன்னிட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆசிரமங்கள், முதியோர் இல்லம், குழந்தை நல காப்பகம் உள்ளிட்ட பல இடங்களில் திருமண விருந்து ஏற்பாடு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.