இரவில் கூட தூங்காமல், நெல்சன் திலீப்குமார் தலைவர் 169 திரைப்படத்தின் கதையை எழுதி வருவதாக நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 169 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், ஐஸ்வர்யாராய், சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் கதைக் குறித்து ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் பேசியுள்ளார்.
தலைவர் 169 திரைப்படம், முழுக்க முழுக்க சிறைச்சாலை மற்றும் சிறை கைதிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் நிலையில், ஜெயிலர் என தற்போது இப்படத்தின் டைட்டிலை வைத்துள்ளதாகவும், முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளதாகவும், வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிலும் முக்கியமாக ரஜினியின் சிறிய வயது கதாபாத்திரத்திற்கு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நெல்சன் திலீப்குமார் இப்படத்திற்காக தூங்காமல் கண் விழித்து கதையை எழுதி வருகிறார் என்றும் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு முதல் பாதி கதையை நெல்சன் எழுதி உள்ளதாகவும், தலைவர் 169 முழுக்க முழுக்க நெல்சனின் இயக்கம் மற்றும் கதையை சார்ந்தே அமைய உள்ள நிலையில் சிறு சிறு மாற்றங்களை மட்டும் ரஜினி செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தின் தோல்வியால் கடந்த 3 மாதங்களாக நெல்சன் பட்ட அவமானங்களால் கண்டிப்பாக இத்திரைப்படத்தை ஹிட்டாகாமல் விடமாட்டார் என தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் நான் கூட நடிப்பேனா என்பது சந்தேகமே எனவும் ரெடின் கிங்ஸ்லி கூறியுள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நெல்சனின் இயக்கத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.