சினிமாவில் ஒருவர் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்றால் திறமை மட்டும் பத்தாது. பார்ப்பதற்கு ரசிகர்களை கவரும் வகையில் அழகாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அடுத்தடுத்து குவிய ஆரம்பித்து விடும். அதில் விதிவிலக்காக இருக்கும் சில ஹீரோக்களும் உண்டு. ஆனாலும் அவர்கள் கஷ்டப்பட்டு தான் மக்கள் முன் தங்களை நிரூபிக்க முடியும்.
அப்படி பல கஷ்டங்களையும், தடங்கல்களையும் தாண்டி இன்று சாதனை நாயகனாக இருப்பவர்தான் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கவர்ந்த இவருக்கு தற்போது பாராட்டுக்கள் மட்டுமல்லாமல் வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியுள்ளது. இந்த காலத்திற்கு ஏற்றவாறு கலகலப்பான ஒரு காதல் கதையை கொடுத்திருக்கும் இவர்தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால் அவர் பட்ட கஷ்டங்களும், துயரங்களும் ஏராளம். அதை அவர் இப்போது வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதாவது இவர் இந்த படத்தை இயக்குவதற்கு முன்வந்த போது பல தயாரிப்பாளர்களும் இவரை ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள். ஏனென்றால் கதை நன்றாக இருந்தும் இவர் ஹீரோவாக நடிப்பேன் என்று கூறியதால் கிட்டத்தட்ட மூன்று தயாரிப்பாளர்கள் இவரை ஒதுக்கி இருக்கின்றனர்.
ஆனாலும் பிரதீப் இந்த படத்தில் நான் தான் ஹீரோவாக நடிப்பேன் என்று விடாப்பிடியாக இருந்திருக்கிறார். என்னை ஹீரோவாக வைத்து யார் படம் தயாரிக்கிறார்களோ அவர்களுடன் இணைந்து நான் பணிபுரிவேன் என்று காத்திருந்தாராம். அப்போதுதான் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இவருடன் பணிபுரிய சம்மதித்திருக்கிறது.
மேலும் இவர் தயாரிப்பாளரிடம் கதை சொன்ன விதமும் அவர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதனால் உங்களால் நிச்சயம் நன்றாக நடிக்க முடியும் என்று கூறிய அவர்கள் உடனே படத்தை தொடங்கவும் சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். இப்படித்தான் இந்த லவ் டுடே திரைப்படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை தற்போது கூறியுள்ள பிரதீப் ரங்கநாதன் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.