பல பிரச்சனைகளை சந்தித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. இரண்டாம் பாகத்தை எடுக்கத் துணிந்த சூர்யா

சூர்யா தற்போது பயங்கர பிசியாக இருக்கிறார். வணங்கான், சிறுத்தை சிவாவின் படம், அடுத்ததாக வாடிவாசல் என்று அவருடைய லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கஜினி. ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் பிரச்சனை இருப்பவராக அதில் சூர்யா நடித்திருப்பார். மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது.

அது மட்டுமல்லாமல் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி வரை வசூலித்தது. அதன் பிறகு இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் சூர்யா தற்போது எடுக்க இருக்கிறார்.

சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சூர்யா இருவரும் சந்தித்துக் கொண்ட போது இது பற்றி கலந்து பேசி இருக்கின்றனர். கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது திரையுலையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த திரைப்படம் ஆரம்பிக்கும் பொழுது முதலில் அஜித் தான் இந்த கதையில் நடிக்க இருந்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட தடங்கல்களால் சூர்யா இந்த படத்திற்குள் வந்தார். அதன் பிறகு படமும் வெளியாகி வெற்றி பெற்றது.

ஆனால் சூர்யாவுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பள பணம் 20 லட்சம் பாக்கி இருந்ததால் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் இந்த படத்தின் சூட்டிங் எதிர்பார்த்த நாட்களைவிட அதிகமானதால் பட்ஜெட்டும் சற்று எகிறி விட்டது. இதனால் தயாரிப்பாளர் மற்றும் முருகதாஸ் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இப்படி பல பிரச்சனைகளை சந்தித்த இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் வர இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.