சின்ன திரையில் பிரபலமாக இருக்கும் சேனல்கள் அனைத்தும் டிஆர்பியை பெறுவதற்காக மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதிலும் பிரபலமாக இருக்கும் சன் டிவி, விஜய் டிவி போன்ற பல சேனல்களும் ஒன்றோடு ஒன்று டிஆர்பி காக முட்டி மோதி வருகிறது.
இப்படி தங்கள் சேனல் டிஆர்பி-காக விஜய் டிவி பல வருடங்களுக்கு முன் ஒரு தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியது. இதனால் விஜய் டிவியின் டிஆர்பி பெருமளவு எகிறியது. அப்படி ஒரு சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் சிம்பு மற்றும் பப்லு இருவர் தான்.
பல வருடங்களுக்கு முன் விஜய் டிவி சின்னத்திரை பிரபலங்களை வைத்து ஜோடி நம்பர் 1 என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அதன் இரண்டாவது சீசனையும் விஜய் டிவி பிரபலமான நடிகர்களை வைத்து தொடங்கியது.
அதில் நடிகர் சிம்பு நடுவராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்தவர் பப்லு என்று அழைக்கப்படும் நடிகர் பிருத்விராஜ். அந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நடிகர் சிம்பு, பிரித்திவிராஜ் மீது நடனம் தொடர்பாக சில குறைகளை கூறினார்.
இதனால் கடுப்பான பப்லு, சிம்புவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சிம்பு தன்னை அசிங்கப்படுத்தி விட்டார் என்று பப்லு அழுதுகொண்டே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்வு அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதிலும் சாதாரணமாக ஒருவர் அழுதாலே அந்த ப்ரோமவை பல தடவை போட்டு காட்டும் விஜய் டிவி, இந்த சண்டை குறித்த ப்ரோமோவையும் திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டி தங்கள் டிஆர்பியை ஏற்றுக்கொண்டது. சிம்புவை எப்படி திட்டலாம் என்று பப்லுவுக்கு எதிராக கிளம்பிய ரசிகர்களும் அப்போது உண்டு.
தற்போது இந்த நிகழ்வைப் பற்றி கூறிய பப்லு அதெல்லாம் சும்மா எங்களோட நடிப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் டிஆர்பிக்காக நாங்கள் கேமரா முன்னால் அப்படித் தான் நடிப்போம், அதை நம்பியது உங்கள் தப்பு, அதுதான் எங்களுடைய வெற்றி என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஏற்கனவே அந்த நிகழ்வு ஒரு ஸ்கிரிப்ட் என்று பல செய்திகள் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக பப்லு இப்படிக் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படி ஒரு கேவலத்தை செய்த விஜய் டிவியை ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.