Adhi-Eeram: பொதுவாக ஹாரர் படங்கள் என்றால் பேய் தலைகீழாக தொங்கும். கோரமான மேக்கப் போட்டு சிரிக்கும். அதுவும் இல்லை என்றால் ரத்த களரியாக வந்து உயிரை எடுக்கும். இப்படித்தான் காலம் காலமாக பேய் படங்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் உருவத்தை காட்டாமல் வெறும் தண்ணீரை வைத்தே பயம் காட்ட முடியும் என்று உணர்த்திய படம் தான் ஈரம். அறிவழகன் இயக்கத்தில் ஆதி, நந்தா, சிந்து மேனன் நடித்திருந்த அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த கூட்டணி மீண்டும் மிரட்டுவதற்கு தயாராகியுள்ளது.
ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக சத்தத்தை வைத்து பயம் காட்டப் போகிறார்கள். அதனால் நம் காதுகளை நாம் கொஞ்சம் பத்திரமாக தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு மிரட்டலான ஒரு சம்பவத்தை இந்த காம்போ செய்ய இருக்கிறது.
மேலும் இப்படத்தில் மூன்று அழகு ஹீரோயின்களும் இணைந்து இருக்கின்றனர். அதன்படி லட்சுமி மேனன், சிம்ரன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெறுகின்றனர். சப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளிவர இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்திருக்கும் படகுழுவுக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது ஹாரர் என்ற பெயரில் வரும் காமெடி படங்களுக்கு மத்தியில் இந்த சப்தம் நிச்சயம் காதுகளை அதிர வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.