கமல் ரிஸ்க் எடுத்து நடித்த சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களை கவர்ந்து விடும். அதிலும் சில படங்கள் காலம் கடந்தாலும் நினைவில் நிற்கும். இந்த காரணத்தினாலேயே அவர் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக தன் படங்களில் முன் வைக்கிறார்.
அதிலும் சில படங்களில் காட்டப்பட்ட விஷயங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடந்து நம்மை ஆச்சரியப்படுத்தி விடும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது. அதாவது சுந்தர் சி இயக்கத்தில் கமல், மாதவன் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அன்பே சிவம். அப்படத்தில் கமலும் மாதவனும் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணம் செய்வார்கள்.
அப்போது அதற்கு முன்பாக சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதாக காட்டப்பட்டிருக்கும். அந்த சம்பவம் தான் 20 வருடங்கள் கழித்து தற்போது நிஜத்தில் நடந்திருக்கிறது. அதாவது தற்போது பலரையும் அதிர வைத்த ஒடிசா ரயில் விபத்து, படத்தில் காட்டப்பட்டது போல் அதே மாநிலம், அதே பாதையில் தான் நடந்திருக்கிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில் பல பேர் உயிரிழந்தனர். இதற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் கமல் பட காட்சி நிஜத்திலும் பழித்து விட்டதே என பலரும் சிலிர்த்து போய் இருக்கின்றனர்.
மேலும் அதே படத்தில் சுனாமி பற்றியும் கமல் பேசியிருப்பார். அதை பார்த்த பலரும் பெரிய அலையா, அப்படி என்றால் என்ன என்று சாதாரணமாக கடந்து போனார்கள். அதுவே நிஜத்தில் நடந்த போது ஸ்தம்பித்து தான் போனார்கள். அப்போது கூட கமலின் கணிப்பு பெரிதாக பேசப்பட்டது. அந்த வகையில் தற்போது மீண்டும் அவருடைய பட காட்சி நிஜத்தில் நடந்திருப்பது வியப்பாகவும் இருக்கிறது.
ஆனாலும் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்திருக்க வேண்டாம் என்றும் மனசு பதைப்பதைக்கிறது. அந்த அளவுக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த சம்பவம் புரட்டி போட்டுள்ளது. இதற்கு பலரும் தங்கள் வருத்தங்களையும், வேதனையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அன்பே சிவம் பட காட்சியை ஒப்பிட்டு தற்போது பலரும் இந்த நிகழ்வினை வேதனையோடு பகிர்ந்து வருகின்றனர்.