இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மாமன்னன்.. உதயநிதியால் கிளம்பிய அடுத்த பிரச்சினை

Actor Udhayanidhi: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் படம் நாளை திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. அதற்கான ப்ரொமோஷன் வேலைகள் அனைத்தும் தற்போது ஜோராக நடந்து வரும் நிலையில் படத்திற்கு எதிரான பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கமல் முன்பாகவே வைத்த கருத்து பூகம்பமாக வெடித்தது. அதை தொடர்ந்து கமல் ரசிகர்கள் மாமன்னன் படத்தை பார்க்க மாட்டோம் என்று கொந்தளித்து வந்தனர். அந்த பிரச்சனையே முடியாத நிலையில் வேறு ஒரு சிக்கல் புதிதாக முளைத்திருக்கிறது.

அதாவது இப்படம் வெளிவந்தால் இரு சமூகத்தினருக்கு இடையே பெரும் பிரச்சனை ஏற்படும் என உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, உதயநிதி ஒரு அமைச்சராக இந்திய இறையாண்மை படி சத்திய பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார். ஆனால் அவர் ஒரு சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் இப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இப்படம் வெளியாவது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அமைச்சரான உடனேயே உதயநிதி மாமன்னன் தான் என்னுடைய கடைசி படம் என்று அறிவித்தார். ஏனென்றால் இது போன்ற பல பிரச்சனைகள் வரும் என்பதால் தான் இந்த முடிவை அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

அப்படி இருந்தும் கூட மாமன்னன் அடுத்தடுத்த சிக்கல்களை சந்தித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க மாரி செல்வராஜின் அடுத்தடுத்த கருத்துக்களால் படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருக்கிறது. இதுவே படகுழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்து வரும் நிலையில் இந்த மனுவும் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறது.

இருந்தாலும் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ரிலீசுக்கு பிறகு தான் பல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் இயக்குனர் இதில் எந்த மாதிரியான சர்ச்சையை இழுத்து வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள தான் இப்போது பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.