Atlee – Magizh Thirumeni: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் நெட்டிசன்கள் வழக்கம் போல இயக்குனர் அட்லியை கழுவி ஊற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் வழக்கமான அவருடைய காப்பி வேலை தான்.
படம் ரிலீஸ் ஆகி இரண்டே நாட்களில் எந்தெந்த காட்சி எந்தெந்த படத்திலிருந்து சுடப்பட்டது என ஒரு பெரிய லிஸ்ட் போடப்பட்டு விட்டது. அட்லிக்கு இது ஒன்றும் புதிது இல்லை. கடந்த 2013இல் சினிமாவிற்குள் நுழைந்த இவர் கிட்டத்தட்ட பத்து வருடங்களில் இயக்கிய ஐந்து படங்களுமே காப்பி தான் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
ஜவான் படமும் சுட்ட கதை தான் என்பதை ரிலீசுக்கு பிறகு எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்த அட்லி இசை வெளியீட்டு விழாவின் பொழுதே தன் மீது இருக்கும் நெகட்டிவ் கமெண்ட்டிற்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் நான் கமர்சியல் படங்கள் எடுத்து ஹிட் கொடுக்கிறேன் என்று பயங்கரமாக உருட்டினார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட காப்பி அடிப்பதை ரொம்பவும் கௌரவமாக பேசி இருந்தார் அட்லி. அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி பேசி இருக்கிறார். அதாவது ஒரு கதையை சுட்டு படம் எடுப்பது என்பது பெரிய சாதனை இல்லை, அது தெரிந்தே செய்யும் தப்பு. அதற்கு நியாயம் சொல்லுவது பசப்பு காட்டும் வேலைக்கு சமம் என்று சொல்லி இருக்கிறார்.
உண்மையிலேயே தமிழ் சினிமாவில் மகிழ் திருமேனி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப் குமார் போன்ற இயக்குனர்கள் கடுமையாக உழைத்து வந்தாலும் அவர்களுக்கான அடையாளம் கிடைத்திருக்கிறதே தவிர, சம்பள விஷயத்தில் பார்த்தால் அட்லியை விட குறைவான இடத்திலேயே இருக்கிறார்கள். என்னதான் படம் காப்பி என்று சொன்னாலும் அட்லி கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து தளபதி விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய இவருக்கு, திண்ணையில் இருந்தவனுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்பது போல் பாலிவுட் என்ட்ரியும் தேடி வந்து அமைந்துவிட்டது. ஜவான் படத்தின் வெற்றியால் இனி அட்லி அடுத்தடுத்து பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனராக வாய்ப்பும் இருக்கிறது.