விஜய் சேதுபதியை ஓரங்கட்டும் தயாரிப்பாளர்கள்.. அடுத்தடுத்த தோல்விகளால் ஆட்டம் கண்ட மார்க்கெட்

குடும்ப ஆடியன்ஸ் உட்பட அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகர் தான் விஜய் சேதுபதி. அவருடைய படம் என்றாலே மிகவும் எதார்த்தமாகவும், குடும்பத்துடன் பார்க்கும் படியாகவும் தான் இருக்கும். ஆனால் அந்த காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. சமீப காலமாக அவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணம் அவர் கதாநாயகனாக நடித்து கடந்த நான்கு வருடங்களாக வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று கூட வெற்றி பெறவில்லை. இந்த வருடம் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்த நிலையில் மாமனிதன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.

இதனால் அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. அதனாலேயே இப்போது அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் பல தயாரிப்பாளர்களும் ஓட்டம் எடுக்கிறார்களாம். ஹீரோவாகத்தான் அவருக்கு வரவேற்பு இல்லை. ஆனால் அவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

மேலும் விஜய் சேதுபதியின் சந்தனம் கதாபாத்திரமும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதற்கு முன்பே அவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து பேரும் புகழையும் தட்டிச் சென்றார். சொல்லப்போனால் அந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே அவரை தேடி இப்போது வில்லன் கேரக்டர்கள் அளவுக்கு அதிகமாக வருகிறதாம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் ஹீரோவாக நடித்தால் அது தயாரிப்பாளர்களை படுகுழியில் தள்ளும் அளவுக்கு மோசமான தோல்வியை பெறுகிறது. அதனால் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் தயங்கி வருகிறார்கள். அந்த வகையில் அவருக்கான வாய்ப்புகளும் இப்போது கணிசமாக குறைந்து விட்டதாம்.

இதையெல்லாம் பார்த்த விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம். நம் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து இன்று ஹீரோவாக உயர்ந்திருக்கும் பல நடிகர்கள் இருக்கின்றார்கள். ஆனால் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தவிட்டு இன்று வில்லன் கேரக்டருக்கு தள்ளப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.