சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியானது. அதேபோன்று பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த சர்தார் படமும் அதே நாளில் வெளியானது. தீபாவளி போட்டியில் வேறு எந்த படங்களும் களமிறங்காத நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி இருவரும் இந்த ரேஸில் இறங்கினார்கள்.

அந்த வகையில் இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. வழக்கமாக அவருடைய திரைப்படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும். ஆனால் இந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை தவறவில்லை.

இதனால் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. ஆனால் கார்த்தியின் சர்தார் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்பும் கிடைத்தது. இதற்கு முன்பு அவர் நடித்த விருமன், பொன்னியின் செல்வன் திரைப்பட வரிசையில் இந்த சர்தார் திரைப்படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

அந்த வகையில் சர்தார் திரைப்படம் முதல் நாள் வசூல் மட்டுமே 4 கோடியை நெருங்கியது. அதேபோன்று பிரின்ஸ் திரைப்படம் முதல் நாள் 2.25 கோடி வசூலித்தது. அதன் பிறகு அடுத்தடுத்து வந்த பண்டிகை விடுமுறை நாட்களில் இந்த வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராமல் கிடைத்த விமர்சனங்களால் தற்போது பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் இந்த நான்கு நாட்களில் வெறும் 24 கோடியை மட்டுமே வசூலித்து இருக்கிறது.

ஆனால் அதை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு கார்த்தியின் சர்தார் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியான இந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 34 கோடி வசூலாகி இருக்கிறது. இன்றுடன் தீபாவளி விடுமுறை நாட்கள் முடிய இருப்பதால் இனி வரும் நாட்களில் இந்த படங்களின் வசூல் நிலை சிறிது குறைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் சர்தார் திரைப்படம் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் 50 கோடியை நெருங்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்த தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளி கார்த்தி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.