Vignesh Shivan: நடிகர் விக்னேஷ் சிவன் எப்போது அஜித்தின் 62 ஆவது படத்தில் இருந்து நீக்கப்பட்டாரோ, அதிலிருந்து அவருக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கப் போகிறார், கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு படம் இயக்கப் போகிறார் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும் அது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இன்று வரை உறுதியாக வில்லை.
விக்னேஷ் சிவன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது மிகப் பெரிய கேள்வியாகவே சினிமா வட்டாரத்தில் இருக்கிறது. உண்மையை சொல்ல போனால் நானும் ரவுடிதான் என்னும் திரைப்படத்தை தவிர அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த வெற்றி படமும் இல்லை. இருந்தாலும் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியை இயக்குனர் தான் என்ற பிரம்மை மட்டும் இருந்து வந்தது.
அதற்கு முக்கிய காரணமே நயன்தாரா தான். நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு நயன்தாராவை காதலிப்பது, அவருடன் ஊர் சுற்றுவது என்பதை தவிர வேறு எந்த விதத்திலும் ரசிகர்களிடையே இவர் பிரபலமாகவில்லை என்பதுதான் உண்மை. இவருடைய இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கதை எப்படி கொண்டு போவது என தெரியாமல் இவர் மொத்தமாக போட்டு சொதப்பியது படத்தின் தோல்விக்கு காரணமாக மாறியது.
நயன்தாராவின் சிபாரிசில் கிடைத்த அஜித் பட ப்ராஜெக்ட் கைவிட்டுப் போன நிலையில், விக்னேஷ் சிவன் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நயன்தாராவின் கணவர் ஆன இவர், சின்னத்திரையில் தொகுப்பாளராக வேலை செய்ய களம் இறங்கி இருக்கிறார். இது கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சினிமா பிரபலங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வேலை செய்ய இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஏற்கனவே நடிகைகள் சுகாசினி, குஷ்பூ, கௌதமி போன்றவர்கள் ஆளுக்கு ஒரு சேனலில் உட்கார்ந்து கொண்டு இந்த வேலையை தான் செய்து வருகிறார்கள். இந்த அரைத்த மாவையே அரைக்கும் நிகழ்ச்சிக்கு விக்னேஷ் சிவன் தற்போது புதுவரவாக இறங்க இருக்கிறார்.
அடுத்தடுத்து படங்கள் இயக்கி பிசியாவார் என்று எதிர்பாக்கப்பட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா உடனான திருமணத்திற்கு பிறகு அடுத்து என்ன செய்வது என்பதை தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார் என்பதுதான் உண்மை. கெட்ட நேரம் ஆரம்பித்தது போல் விக்னேஷ் சிவன் இப்படி வாய்ப்பில்லாமல் சுற்றி வருகிறார். அதே போன்று தான் நயன்தாராவின் நிலைமையும் சமீப காலமாக இருக்கிறது.