திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தேசிய விருது ஹீரோ, மாரி செல்வராஜுக்கு வரிசை கட்டி நிற்கும் படங்கள்.. கொடி கட்டி பறக்கும் மார்க்கெட்

Mari Selvaraj: மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட் பற்றி அவரே கூறியுள்ளார். தன் முதல் படத்திலேயே தான் நினைத்ததை கதையாக எழுதி, திரைக்கதை அமைத்து, அதைக் காட்சிப்படுத்தி படமாக உருவாக்கி அதில் வெற்றி பெறுவது என்பது அரிதான விசயம். ஆனால், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அதை நடத்திக் காட்டியவர் மாரி செல்வராஜ். அவரது படங்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவை அங்கீகாரமும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா எப்படி மாண்வாசனையை தன் படங்களில் கொண்டு வந்து சினிமாவில் புதுமையைச் செய்து காட்டினாரோ அதேபோல் சினிமாவில் கிராமிய வாழ்வியலை இன்னொரு பரிணாமத்துக்கு கொண்டு சென்று மக்களிடம் காட்டியவராக மாரி செல்வராஜ் பார்க்கப்படுகிறார்.

அவரது ‘பரியேறும் பெருமாள்’ படம் ஜாதி ரீதியான படமாக இருந்தாலும் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்று அவருக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, இரண்டாவது படம் தேசிய விருது பெற்ற தனுஷுடன் ‘கர்ணன்’. இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ படமும் ஒடுக்கப்பட்டவர் அரசியலில் சந்திக்கும் சூழலை அழுத்தமாகப் படமாக்கியிருந்தார்.

இப்படத்தை அடுத்து, அவர் இயக்கியிருந்த ‘வாழை’ படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று, சினிமாத்துறையினரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து, விக்ரம் மகன் துருவ் நடிப்பில் மாரி செல்வராஜ் ‘பைசன்’ என்ற படம் இயக்கவுள்ளார். ஏற்கனவே துருவ் விக்ரமின் முதல் படமான பாலா இயக்கிய ‘வர்மா’ வெளியாகி தோல்வியடைந்தது. அதன்பின்னர், கிரிசாயா இயக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான ‘ஆதித்யா வர்மா’வும் சொதப்பியது.

மகான் படத்தில் தன் தந்தையுடன் இணைந்து நடித்திருந்த துருவ் விக்ரம், அடுத்து ‘பைசன்’ (காளமாடன்) படத்தில், கபடி வீரராக நடிக்கவுள்ளார். மாரி செல்வராஜுடன் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. தற்போது முன்னணி நடிகர்களே மாரி செல்வராஜின் படத்தில் நடிக்க காத்திருக்கும் நிலையில், அவர் இயக்கும் அடுத்த படம் எது என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தன் அடுத்தடுத்த படங்கள் பற்றி மாரி செல்வராஜ் கூறியுள்ளதாவது: ‘பைசன் படத்திற்குப் பின் ஒரு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்தில் இணைய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பைசன் படம் பரியேறும் பெருமாள் வெளியானபோது ஒப்பந்தமானது. கர்ணன் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது அடுத்து இயக்கும் தனுஷின் படத்திற்கு ஒப்பந்தமானது. அவையே இப்போதுதான் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Trending News