பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும் பிரேமம் படம் மூலமாகவே இவர் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நேரம் படத்திற்குப் பின்னர் தமிழில் படங்கள் நடிக்காத நிலையில், தற்போது புதிய கதைக் களத்துடன் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள மாநாடு படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அடுத்ததாக ராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகளை செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்க உள்ளார். இப்படத்தில் தான் நிவின்பாலி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இவர்கள் இருவர் உட்பட 4 கதாபாத்திரங்களை மட்டும் மையமாக வைத்து படத்தின் பெரும்பகுதி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகி இல்லை. கதை கேட்டபோதே கதைக்களமும், தனது கதாபாத்திரமும் வித்தியாசமாக இருப்பதை அறிந்த சூரி, தானே ஆர்வத்தோடு முன்வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் இயக்குநர் ராம் உருவாக்கியுள்ள அந்த கதாபாத்திரம் தன்னை வெகுவாக ஈர்த்துள்ளதாக சூரி தெரிவித்துள்ளார். தமிழில் இது போன்ற படங்கள் வெளிவருவது அரிதான ஒன்று. முன்னதாக நடிகர் சித்தார்த் நடிப்பில் நாயகி இல்லாமல் வெளியான படம் ஜில் ஜங் ஜக். ஆனால் இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள நடிகர் நிவின் பாலி தமிழில் நடிப்பதாலும், வித்தியாசமான கதைக்களத்தில் படம் அமைந்திருப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவிர நடிகர் சூரியும் படத்தில் இணைந்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது.