வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி.. சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் பேசிய போது 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வில் தேர்ச்சி அளிக்கவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து 9, 10, 11 ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டாலும். பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு, அவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

ஏனென்றால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதைப்போல் இந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதால் சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்களின் கோரிக்கையையும் ஏற்கும் விதமாக, கல்வியாளர்களின் சிபாரிசின் பேரில் 2020-21 ஆம் ஆண்டில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக, தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

அதற்கேற்றார்போல் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பால் பள்ளி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Trending News