திரையரங்கம் போக வேணாம்.. இந்த வாரம் ஓடிடியிலேயே இத்தனை பெரிய படங்களா?
இந்த வார கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ஓடிடி தளங்களில் அதிரடி ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ரொமாண்டிக் கதைகள் எனப் பெரும் படப் பட்டாளமே அணிவகுக்கின்றன.
இந்த வாரம் ஜீ5 தளத்தில் தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்கள் ரசிகர்களைக் கவரக் காத்திருக்கின்றன.
மிடில் கிளாஸ் (டிசம்பர் 24) நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் எதிர்பாராத பண வரவால் (காசோலை) சந்திக்கும் குழப்பங்களும், நெகிழ்ச்சியான தருணங்களும் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. சென்னை பின்னணியில் அமைந்த இந்த 'ஸ்லைஸ் ஆஃப் லைஃப்' திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க ஏற்றது.
ஏக் தீவானே கி தீவானியத் (டிசம்பர் 26) காதலும் அரசியலும் மோதினால் என்னவாகும்? அதிகாரப் போரின் பின்னணியில் ஒரு த்ரில்லர் கதையை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும்.
ரொங்கினி பவன் (டிசம்பர் 25) திகில் விரும்பிகளுக்காக ஒரு பெங்காலி தொடர். பழைய கட்டிடங்களுக்குள் ஒளிந்திருக்கும் மர்மங்களை அவிழ்க்கும் இந்தத் தொடர், கிறிஸ்துமஸ் இரவுக்கான சரியான தேர்வாக இருக்கும்.
நெட்ஃபிளிக்ஸ் இந்த வாரம் தனது பயனர்களுக்கு மிகச்சிறந்த 'லைன்-அப்' வைத்துள்ளது.
ரிவால்வர் ரீட்டா (டிசம்பர் 26) தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், முதன்முறையாக ஒரு முழுநீள டார்க் காமெடி த்ரில்லரில் 'ரீட்டா'வாக மிரட்ட வருகிறார். எதார்த்தமான ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களை அவர் எப்படித் துப்பாக்கி ஏந்தி எதிர்கொள்கிறார் என்பதே கதை. இப்படத்தின் போஸ்டர்களே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 - வால்யூம் 2 (டிசம்பர் 26) உலகமே ஆவலுடன் காத்திருக்கும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' தொடரின் இறுதி அத்தியாயங்கள் வெளியாகின்றன. ஹாக்கின்ஸ் நகரத்தின் தலைவிதி என்னவாகும் என்பதை அறிய ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.
ஆந்திரா கிங் தாலுகா (டிசம்பர் 25) தெலுங்கு திரையுலகின் ரசிகர் பட்டாளம் மற்றும் ஒரு சூப்பர் ஸ்டாரின் 100-வது படம் சந்திக்கும் சிக்கல்களைப் பேசும் எமோஷனல் டிராமா இது.
குட்பை ஜூன் & ஐடல் ஐ கிறிஸ்துமஸ் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் 'குட்பை ஜூன்' உணர்ச்சிகரமாகவும், கொரியன் சீரிஸ் பிரியர்களுக்காக 'ஐடல் ஐ' (டிசம்பர் 22) மர்மம் நிறைந்த சட்டப் போராட்டமாகவும் அமையவுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் உலகத் தரம் வாய்ந்த இசை மற்றும் ஸ்பை த்ரில்லர்கள் வெளியாகின்றன.
நோபடி 2 (டிசம்பர் 22) ஆக்ஷன் பிரியர்களின் பேவரைட் ஹட்ச் மான்செல் மீண்டும் களமிறங்குகிறார். முதல் பாகத்தைப் போலவே இதிலும் அதிரடி சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது.
அமேடியஸ் (டிசம்பர் 22) இசை மேதை மொசார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர், 18-ஆம் நூற்றாண்டு வியன்னாவிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு கலைப் படைப்பு.
கோபன்ஹேகன் டெஸ்ட் (டிசம்பர் 28) ஒரு உளவாளியின் மூளை ஹேக் செய்யப்பட்டால் என்ன நடக்கும்? நவீன காலத் தொழில்நுட்ப ஆபத்துகளைப் பேசும் ஒரு ஹை-டெக் ஸ்பை த்ரில்லர் இது.
நாகினி 7 (டிசம்பர் 27) இந்தியாவின் மிகவும் பிரபலமான சூப்பர்நேச்சுரல் தொடரான நாகினி, புதிய திருப்பங்களுடன் ஏழாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.
