ஜனவரி 9 ஓடிடி ரிலீஸ்.. பொங்கல் ரேஸில் இத்தனை படங்களா?
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை திரைத்துறைக்கு மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளது. திரையரங்குகளில் விஜய், பிரபாஸ், சிவகார்த்திகேயன் என ஜாம்பவான்கள் மோதிக்கொள்ளும் அதே வேளையில், ஓடிடி தளங்களும் சளைக்காமல் டஜன் கணக்கான புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை களமிறக்குகின்றன.
ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் மிகப்பெரிய மோதல் அரங்கேறுகிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் ஒருபுறம் மாஸ் காட்டத் தயாராக இருக்க, அதற்குப் போட்டியாக தென்னிந்தியாவின் பான்-இந்தியா ஸ்டார் பிரபாஸின் ராஜா சாப் ரிலீஸ் ஆகிறது.
இது ஒரு ஹாரர்-காமெடி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு அடுத்த நாள், ஜனவரி 10-ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியாகிறது. இதனால் இந்த பொங்கல் விடுமுறை சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமையப்போகிறது.
தியேட்டருக்குச் செல்ல முடியாதவர்களுக்காக ஓடிடி தளங்கள் பலதரப்பட்ட கதையம்சம் கொண்ட படைப்புகளை வழங்குகின்றன. நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மாஸ் ஹிட் படமான அகண்டா 2 தாண்டவம் தியேட்டர் ரன் முடிந்து ஜனவரி 9 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.
ஆன்மீகம் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்தப் படத்தில் மீண்டும் அகோரி வேடத்தில் பாலகிருஷ்ணா மிரட்டியுள்ளார். அதேபோல், அஜய் தேவ்கன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான குடும்பப் பாங்கான காதல் திரைப்படமான ‘தே தே பியார் தே 2’ அதே நாளில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
துப்பறியும் கதைகளை விரும்புவோருக்கு ஜீ5 (ZEE5) தளத்தில் ‘மாஸ்க்’ திரைப்படம் வெளியாகிறது. அரசியல் பின்னணியில் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர் சந்திக்கும் சவால்களை இந்தப் படம் பேசுகிறது. மேலும், நிஜமான கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஹனிமூன் சே ஹத்யா’ என்ற ட்ரூ-க்ரைம் ஆவணப்படமும் ஜீ5-ல் வெளியாகிறது. விளையாட்டும் நிழல் உலகமும் சந்திக்கும் புள்ளியில் உருவாகியுள்ள ‘பால்டி’ என்ற ஆக்ஷன் திரில்லர் பிரைம் வீடியோவில் ஜனவரி 9 முதல் பார்க்கலாம்.
வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளை விரும்புபவர்களுக்காக சோனி லிவ் (SonyLIV) தளத்தில் ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ இரண்டாம் பாகம் வெளியாகிறது. இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய சிக்கல்களை இது அலசுகிறது. லண்டனின் நிழல் உலகக் கதையைச் சொல்லும் ‘எ தௌசண்ட் ப்ளோஸ்’ இரண்டாம் பாகம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற ‘தி நைட் மேனேஜர்’ சீசன் 2, வரும் ஜனவரி 11 முதல் அமேசான் பிரைமில் வெளியாகிறது. சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் ‘அங்கம்மாள்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்திலும், ரொமாண்டிக் கதையான ‘பீப்பிள் வீ மீட் ஆன் வெக்கேஷன்’ நெட்ஃபிளிக்ஸிலும் வெளியாகத் தயாராக உள்ளன.
