ஒரு படம் ரசிகர்கள் மனதில் எந்த அளவிற்கு ஆழமாக பதிகிறது என்பதில் தான் அந்த படத்தின் வெற்றி உள்ளது. அந்த வகையில் ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனர் தான் முக்கிய காரணமாக இருப்பார். ஏனெனில் இயக்கம் சரியாக இல்லையெனில் படமும் சரியாக அமையாது. அந்த வரிசையில் கோலிவுட்டில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் நிச்சயம் பார்த்திபன் பெயர் இருக்கும்.
இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் ஆவார். இவரே இயக்கி இவரே தனி ஒரு ஆளாக நடித்து வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக ஒருவர் மட்டுமே நடித்த இப்படத்திற்கு சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது.
இதுதவிர சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து இதை ஹிந்தியில் ரீமேக் செய்ய பார்த்திபன் முடிவு செய்தார். அதன் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் இப்படத்தில் பார்த்திபன் நடித்த கேரக்டரில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பார்த்திபன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கூடுதல் தகவல் என்னவென்றால் ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு இளையராஜா இசை அமைக்கிறாராம்.
இதுவரை கோலிவுட்டில் மட்டும் கலக்கி வந்த பார்த்திபன் தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அதுவும் இசைஞானி கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் நிச்சயம் நல்ல வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த விருது இந்த படத்திற்கு தான் என ரசிகர்கள் இப்போதே கூற தொடங்கி விட்டார்கள்.