எப்படியும் ஆஸ்கர் விருதை வாங்கியே தீருவேன் என்ற தீராத வெறியோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் இயக்குனர் பார்த்திபன். அப்படி அவருடைய வித்தியாசமான முயற்சியில் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கும் திரைப்படம் தான் இரவின் நிழல்.
இப்படி ஒரு புதுமையான முயற்சியை திரையுலகில் யாரும் செய்யவில்லை என்று சொல்வதைக் காட்டிலும், செய்ய வேண்டும் என்று எண்ணி கூட இருந்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு விஷயத்தை தைரியமாக கையில் எடுத்திருக்கும் பார்த்திபனுக்கும், அவருடைய குழுவினருக்கும் முதலில் ஒரு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.
ஏனென்றால் ஒரு திரைப்படம் முழுமை பெற்று மக்களை சென்றடைவதற்கு பின்னால் பலரின் உழைப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் போது கிட்டத்தட்ட 93 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். இதை அவ்வளவு எளிதில் நடத்தி காட்டி விட முடியாது.
அவரின் இந்த முயற்சி ஒரு தனி மனிதனால் சாத்தியமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. இந்த சாதனைக்கு பின்னால் பார்த்திபன் முக்கிய புள்ளியாக இருந்தாலும், அவருக்கு பக்க பலமாக ஏ ஆர் ரகுமானின் இசையும், ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் இருக்கிறது.
இப்படி ஒரு முயற்சி சாத்தியமா என்றும், அப்படி ஒரு படம் எடுக்கவே முடியாது என்றும் இந்த படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதற்கெல்லாம் விடை சொல்லும் விதமாக பார்த்திபன் படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு இந்த படம் எப்படி எடுக்கப்பட்டது என்ற மேக்கிங் வீடியோவையும் போட்டு அனைவரின் வாயையும் அடைத்து விடுகிறார்.
அந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும் போதே இந்த படத்திற்காக எத்தனை பேர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த முயற்சி பார்த்திபனுக்கு முதல் தடவை சாத்தியமாகிவிடவில்லை. கிட்டத்தட்ட 23 முறை இதற்காக அவர் போராடி இருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குழுவினரும் அவருக்கு துணையாக கை கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி பலரும் ரத்தமும், வியர்வையும் சிந்தி எடுக்கப்பட்ட இந்த இரவின் நிழல் திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற ஒரு விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம். கதைப்படி சினிமா பைனான்சியராக இருக்கும் நந்துவிற்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் ரோபோ ஷங்கரின் உதவியை நாடுகிறார்.
அப்படி அவருக்கு என்ன பிரச்சினை நடந்தது, அதிலிருந்து அவர் மீண்டாரா, இல்லையா என்பதை பார்த்திபன் தன்னுடைய பாணியில் மிகவும் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். 1970ல் ஆரம்பித்து தற்போது வரை நந்துவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை நிகழ் காலம், கடந்த காலம் என்று மாற்றி மாற்றி காட்டி இருப்பது சிறப்பு.
நந்துவின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இதில் கலை இயக்குனருக்கு அதிக வேலை இருக்கிறது. அதை புரிந்து கொண்டு அவரும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரே இடத்தில் பல செட்களை அற்புதமாக உருவாக்கி படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
அதிலும் கதை ஓட்டத்திற்கு ஏற்றது போல் இருக்கும் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை ஒரு புது மேஜிக்கை உருவாக்கி இருக்கிறது. இதனால் படத்தை பார்க்கும் ரசிகர்கள் முழுவதும் கதையுடன் ஒன்றி விடுகின்றனர். இப்படி இந்த படத்திற்கு பல பிளஸ் இருந்தாலும் சின்ன சின்ன சறுக்கல்களும் இருக்கிறது.
அதாவது படத்தின் கதை பலரும் யூகிக்கும் வகையில் இருந்தாலும் அதை காட்சிப்படுத்தி இருக்கும் அமைப்பும், டெக்னாலஜியும் ரசிகர்களை படத்தில் இருக்கும் மைனஸை கவனிக்கவிடாமல் செய்துவிடுகிறது. அந்த வகையில் நான் லீனியர் என்ற இப்படி ஒரு புது முயற்சியை வெற்றிகரமாக கையாண்டிருக்கும் பார்த்திபனுக்கு இந்த படம் அவருடைய திரை பயணத்தில் முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் நடிப்பு, வசனம் என்று எந்த இடத்திலும் பிசிறு கட்டாமல் கொண்டு சென்றுள்ள பார்த்திபன் ஒட்டுமொத்த கதாபாத்திரங்களையும் தாங்கிப் பிடிக்கும் மையப் புள்ளியாகவும் இருக்கிறார். இப்படி பலரும் மெனக்கெட்டு உழைத்திருக்கும் இந்த இரவின் நிழல் படம் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு இருக்கிறது.