சமீபகாலமாக தமிழ் சினிமா வழக்கமான மசாலா படங்களை தவிர்த்து தரமான புதிய கதை களங்களைக் கொண்ட படங்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவின் தரமும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் தமிழில் வெளியாகி பல விருதுகளை குவித்த படம் தான் ஒத்த செருப்பு.
பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே. அதுவும் பார்த்திபனின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்ததால் இப்படத்திற்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் நடிகர் பார்த்திபன் இறங்கியுள்ளார். அதன் விளைவாக பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக்பச்சன் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்ய உள்ளனர். ஆனால் தெலுங்கில் நடிகர் பார்த்திபன் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக முன்னணி தெலுங்கு இயக்குனர் வெங்கட் சந்திரா என்பவர் இயக்க உள்ளார். மேலும் பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், இயக்குனருமான பாண்டியா கணேஷ் என்பவர் நடிக்க உள்ளார் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் படமான ஒத்த செருப்பு படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் உருவாகி வருவது அப்படத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றியாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. இது போன்ற ஒரு சில படங்களால் மட்டுமே தமிழ் சினிமாவின் தரம் இன்றளவும் நிலைத்து நிற்கிறது.