சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி அதில் தங்களால் எந்தளவிற்கு திறமையை வெளிப்படுத்த முடியும் என்று இயக்குனர்களும், நடிகர்களும் மாறி மாறி போட்டியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர்கள் தங்கள் நடிப்பு மூலமும் இயக்குனர்கள் தங்கள் கதை மற்றும் இயக்கம் மூலம் தங்களை நிரூபித்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் தன் முத்திரையை கோலிவுட் சினிமாவில் பதித்தவர் தான் பார்த்திபன். ஒரு நடிகராக நடிப்பதிலும் சரி, ஒரு இயக்குனராக படத்தை வழங்குவதிலும் சரி இவருக்கு நிகர் இவர் மட்டுமே. மாறுபட்ட கதைகள் மூலமும், வித்தியாசமான நடிப்பு மூலமும் தற்போது வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் பார்த்திபன்.
இவரை போன்ற சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்களால் தான் தமிழ் சினிமாவின் தரம் அடுத்தடுத்து உயர்ந்து வருகிறது. அதில் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் பார்த்திபனின் பங்கும் உள்ளது. மேலும் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கும் அந்த பெருமை சேரும். ஏனெனில் முதன் முறையாக பார்த்திபனே இயக்கி, இவர் மட்டுமே முழு படத்திலும் நடித்திருந்தார். இவரை தவிர அந்த படத்தில் வேறு எந்த கதாபாத்திரமும் கிடையாது.
ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு முழு படத்தை பார்த்திபன் இயக்கியது பலரது பாராட்டையும் கவனத்தையும் பெற்றது. அதுமட்டும் இன்றி இவரின் இந்த திறமையை கெளரவிக்கும் விதமாக ஒத்த செருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. இருப்பினும் சிறந்த நடிகருக்கான விருது பார்த்திபனுக்கு கிடைக்காதது சற்று வருத்தம் அளிப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “20 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக தேசிய விருது வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது நான் முதல் முறையாக இயக்கியுள்ள இரவின் நிழல் என்ற குறும்படம் ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்” என்று கூறியுள்ளார். உலகில் முதல் முறையாக ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.