தமிழ் சினிமாவில் மாறுபட்ட மற்றும் வித்தியாசமான படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.
இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சைக்கோ படத்தை இயக்கிய மிஷ்கின் அதனைத் தொடர்ந்து யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. அந்த நிலையில் தான் இவர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்தார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா, நடிகை பூர்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மிஷ்கின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பேய் படம் என்பதால் பிசாசை காட்டி பயமுறுத்தியிருப்பார் என ஆவலோடு பார்த்தால் குளியல் தொட்டியில் ஒரு பெண் கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக படுத்திருக்கும் காட்சி அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

பிசாசு படத்தில் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி அமைதியாக வந்து போகும் ஒரு பிசாசை மையமாக வைத்து மிஷ்கின் இயக்கி இருந்தார். அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.