பொதுவாகவே ஒரு வீரர் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டால், அவர் இந்திய தொடரில் நிச்சயமாக திரும்பவும் தன் ஃபார்மிற்கு வந்து விடுவார். இந்திய அணி வலிமையான அணி என்றாலும் ஒரு காலத்தில் பவுலிங் யூனிட்டில் கொஞ்சம் பின்னடைவாக தான் இருந்தது.
தற்போதுள்ள நவீன உலகத்தில் கிரிக்கெட் என்பது மட்டையாளர்களின் விளையாட்டாக மாறி வருகிறது. பந்து வீச்சாளர்களின் மவுசு அதிகமாக எடுபடுவதில்லை. சமீப காலமாக இந்திய அணி பந்துவீச்சில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில் இந்திய அணி என்றாலே நங்கூரம் போல் நிலைத்து நின்று சதம் விலாசக்கூடிய வீரர்களை இதில் பார்ப்போம்.
ஸ்டீவன் ஸ்மித்: ஒருநாள் போட்டி தொடரில் நீண்டகாலமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் ஸ்மித். இவருடைய பேட்டிங் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடிக்கும் வகையில் மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்திய அணி என்றால் இவருக்கு அல்வா தின்பது போல். இந்திய அணிக்கு எதிராக 21 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற ஸ்டீவ் ஸ்மித் 1123 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இவர் அடித்த பதினோரு ஒருநாள் சதங்களில் ஐந்து சதங்களை இந்தியாவுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமார் சங்ககாரா: இலங்கை அணியின் நட்சத்திர வீரரான இவர் இந்திய அணிக்கு எப்போதுமே சிம்மசொப்பனமாக விளங்குவார். சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக, தான் விளையாடிய காலங்களில் செயல்பட்ட குமார் சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 76 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2700 ரன்களை அடித்துள்ளார். அதில் 18 அரை சதங்களும் 6 சதங்களும் விளாசியுள்ளார்.
ஏபி டிவில்லியர்ஸ்: 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவராலும் அழைக்கப்படுவார். சுழற்றி சுழற்றி அடிக்கும் இவர் அனைத்து பவுலர்ககளுக்கும் ஒரு அச்சுறுத்தும் பேட்ஸ்மேன் ஆகவே இருந்தார். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக மிகவும் திறம்பட செயல்படக்கூடிய டிவில்லியர்ஸ், இந்தியாவுக்கு எதிராக 32 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 1357 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஐந்து அரை சதங்களும் 6 சதங்களும் அடங்கும். 2015 இல் மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 61 பந்துகளுக்கு 119 ரன்கள் அடித்து தனது சிறந்த ஸ்கோரை பதிவு செய்தார்.
ரிக்கி பாண்டிங்: ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று இவரைக் கூறலாம். கிட்டத்தட்ட இரண்டு உலக கோப்பைகளை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்காக வாங்கிக் கொடுத்தவர் பாண்டிங். இந்தியாவுக்கு எதிராக 59 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2164 ரன்களை அடித்துள்ளார். அதில் ஒன்பது அரை சதங்களும் 6 சதங்களும் அடங்கும். மேலும் 2003 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக 121 பந்துகளில் 140 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்காமல் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
சனத் ஜெயசூர்யா: அதிரடி ஆட்டத்தை அனைத்து நாடுகளுக்கும் கற்றுக்கொடுத்தவர் ஜெயசூர்யா. இவர் இந்தியாவுக்கு எதிராக 89 போட்டிகளில் பங்கேற்று 2899 ரன்களை அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 7 சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். மேலும் 2000ம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற முத்தொடர் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 189 ரன்கள் அடித்து தனது சிறந்த ஸ்கோரை பதிவு செய்தார்.