சீமராஜா படத்தின் தோல்விக்கு பிறகு பொன்ராமின் சினிமா மார்க்கெட் அப்படியே கீழிறங்கி விட்டது. இதனால் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் வெளியாகும் படத்திற்கு சுத்தமாக எதிர்பார்ப்புகள் இல்லை. சினிமாவின் ஆரம்ப காலத்தில் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து படங்களை எடுத்து வந்தார். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனால் பல ரசிகர்கள் சீமராஜா படம் வெற்றி அடையாததற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என கூறிவந்தனர்.
ஒரு சில ரசிகர்கள் படத்தின் இயக்குநரான பொன்ராமை குற்றம்சாட்டினர். இதனால் இவர்கள் இருவரும் தனித்தனியாக படங்களில் பணியாற்ற ஆரம்பித்தனர். சிவகார்த்தியனை விட்டு தற்போது பொன்ராம் சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
திட்டமிட்டபடி எம்ஜிஆர் மகன் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இடையில் குறித்த தேதியில் வெளியிட முடியாமல் படக்குழுவினர் தடுமாறிய நிலையில் தற்போது ஒரு வழியாக ஏப்ரல் 23 ஆம் தேதி எம்ஜிஆர் மகன் படம் வெளியாக உள்ளது.
அதனைத்தொடர்ந்து அடுத்ததாக முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தையும் வெற்றிப் படமாக கொடுத்து விட்டால் மீண்டும் இழந்த மார்க்கெட்டை மீட்டு விடலாம் என பொன்ராம் விஜய் சேதுபதி படத்தின் கதையை கத்தி போல் கூர்மையாக தீட்டி வருகிறாராம்.
ஆனால் கடந்த சில வருடங்களாகவே சிவகார்த்திகேயன் பொன்ராமின் கதைகளை ஒதுக்கி வந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதில் துளி அளவும் உண்மை இல்லை என்கிறார்கள் சிவகார்த்திகேயன் வட்டாரங்கள்.