பிரபல இயக்குனருடன் இசைஞானி இளையராஜா 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பணியாற்ற உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த பாடகர் மற்றும் நடிகர் எஸ் பி பாலசுப்ரமணியம் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கேளடி கண்மணி. இந்த படத்தை வசந்த் என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் இளையராஜா இசையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் மண்ணில் இந்த காதல் இன்றி என்று மூச்சுவிடாமல் ஒரு பாடலை பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
இந்த படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் ஜோடியாக நடிகை ராதிகா நடித்திருக்கிறார். அதன்பிறகு வசந்த் இயக்கத்தில் ஆசை, நேருக்கு நேர், ரிதம், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற பல படங்கள் வெளியாகி இருந்தாலும் வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் வசந்த் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கேளடி கண்மணி படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்து புதிய படத்தில் பணியாற்ற உள்ளார் வசந்த்.
சமீபத்திய பேட்டியில் இதை உறுதி செய்த வசந்த் விரைவில் அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.