தமிழ் சினிமாவில் இருக்கும் பல திறமையான இயக்குனர்களில் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனும் ஒருவர். இவரது படைப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமான கோபுரங்கள் சாய்வதில்லை இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
அதை தொடர்ந்து இவர் ஏராளமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் நெருங்கிய நண்பரான சத்யராஜை வைத்து இவர் ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவருடைய இரட்டை அர்த்த வசனங்களும், குறும்புத்தனமான சேட்டையும் தான் இவருடைய படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது.
சமீபத்தில் இவரை பற்றி இயக்குனர் ராஜகுமாரன் ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, மணிவண்ணன் சார் கதையை தயார் செய்த சில வாரங்களிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விடுவார். அங்கு சென்று அந்த சீனை அவர் மிகவும் அற்புதமாக எடுத்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் ஒரே நேரத்தில் 3 படங்களை இயக்கும் திறமை கொண்டவர்.
நான் ஒருமுறை அவரை கோபிசெட்டிபாளையத்தில் கல்யாண கச்சேரி என்னும் படத்தின் படப்பிடிப்பின்போது சந்தித்தேன். தூரத்தில் இருந்தபடியே அவருக்கு நான் வணக்கம் வைத்தேன். அதன் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அவரிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்ற எனது ஆசையை வெளிப்படுத்தினேன்.
அதற்கு அவர் ஐஐடியில் ஷூட்டிங் இருக்கு நாளை அங்கு வா என்று கூறினார். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால் ஐஐடி எங்கு இருக்கு என்று எனக்கு தெரியாது. அதனால் அவருடன் என்னால் பணியாற்ற முடியவில்லை. சில காலங்களுக்குப் பிறகு நான் இயக்குனர் விக்ரமன் சாரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தேன்.
அப்போது சூரிய வம்சம் படத்தில் நான் உதவி இயக்குனராக இருந்த போது மணிவண்ணனை மீண்டும் சந்தித்தேன். அவரைப் பற்றி கூறினாலே அந்தப் படத்தில் சுந்தர்ராஜன் சாருடன் அவர் சேர்ந்து குடிக்கும் காட்சி தான் எனக்கு ஞாபகத்திற்கு வரும். மணிவண்ணன் சார் நிஜத்திலும் மிகப் பெரிய குடிகாரர். அவர் சூட்டிங் ஸ்பாட் மட்டுமல்லாமல் எல்லா இடத்திலும் குடித்துக் கொண்டே தான் இருப்பார்.
இது எந்த மாதிரியான கலாச்சாரம் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் இதுபோன்று தொடர் குடிகாரராக இல்லாமல் இருந்திருந்தால் பல சாதனைகளை படைத்து இருப்பார். இவ்வளவு சீக்கிரம் நம்மளை விட்டு சென்றிருக்கவும் மாட்டார் என்று ராஜகுமாரன், மணிவண்ணன் பற்றி கூறியிருக்கிறார்.