ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய்யுடன் இணையும் பிரபு தேவா.. 10 வருடத்திற்கு பின் நடக்கும் தரமான சம்பவம்

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்திருந்தாலும் விஜய்யின் ரசிகர்களால் தற்போது வெற்றிவாகை சூடியுள்ளது. அதோடு கலெக்ஷனிலும் மாஸ் காட்டி வருகிறது.

இதையடுத்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இது விஜய் நேரடியாக நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் என்பதால் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. மேலும் படத்தில் விஜய்யின் எண்ட்ரி மிகவும் மாஸாக இருப்பதற்காக இயக்குனர் நிறைய மெனக்கெட்டு வருகிறார்.

எப்போதுமே விஜய்யின் திரைப்படத்தில் அறிமுக பாடல் மிகவும் கலக்கலாக இருக்கும். அதே போன்று இந்த படத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக விஜய், பிரபு தேவாவிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்திருக்கிறார். விஜய்க்கு நெருங்கிய நண்பராக இருக்கும் பிரபுதேவாவும் அவருடைய கோரிக்கையை ஏற்று இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து தர சம்மதித்துள்ளார்.

இதற்கு முன்னதாக விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த ரவுடி ரத்தோர் என்ற திரைப்படத்தில் வந்த ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஒரு பெரிய நடிகராக இருந்த போதிலும் விஜய், பிரபுதேவாவுக்காக இந்த விஷயத்தை செய்தார்.

அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு இருந்து வருகிறது. அதன் காரணமாகவே பத்து வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா தன்னுடைய பிஸியான வேலைகளிலும் விஜய்யின் கோரிக்கையை ஏற்று இந்த படத்தில் நடனம் அமைத்து தர இருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலை தயாரிப்பு நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பிரபுதேவாவும் இந்த படத்தில் இணைய இருப்பதால் விஜய்யின் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Trending News