ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

16வது நாளில் நடந்த விபரீதம்.. 40 நாட்கள் வரை தியாகம் செய்த ஜெயில் படக்குழுவினர்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கும் திரைப்படம் ஜெயில். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்து ஒரு வழியாக ரிலீஸ் ஆனது.

தற்போது இப்படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் ஜி வி பிரகாஷ் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் அபர்ணதியின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

இப்படம் வெளிவருவதில் எவ்வளவு சிக்கல்களை சந்தித்ததோ, அதைவிட அதிகமாக இப்படம் எடுக்கப்படும் பொழுது அதிக பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இந்த படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் மூலம் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்திருந்தார்.

படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 16வது நாளில் தயாரிப்பாளருக்கு ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தின் காரணமாக அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று இயக்குனர் முதல், படக்குழுவினர் அனைவரும் தவித்து வந்தனர்.

இருப்பினும் மீதி இருக்கும் படத்தின் படப்பிடிப்பை 40 நாட்கள் ஒட்டு மொத்த படக்குழுவும் இணைந்து மிகவும் சிரமத்துக்கு இடையில் நடத்தி முடித்துள்ளது.மேலும் படக்குழுவில் இருந்த அனைவரும் எந்த பணமும் வாங்காமல் 40 நாட்கள் இந்த படத்திற்காக வேலை செய்துள்ளனர்.

அப்படி எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து, பல பிரச்சனைகளையும் தாண்டி இப்படத்தை இயக்குனர் வெளியிட்டுள்ளார். ஜெயில் படம் தற்போது அனைவரின் பாராட்டை பெற்றாலும், படத்தின் தயாரிப்பாளர் இன்னும் கோமா நிலையில் இருந்து மீளாமல் இருப்பது மிகுந்த துயரமான ஒன்று.

Trending News