தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜயகாந்த் திரைப்படங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்தது. அதிலும் அவரை கேப்டன் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் ஏராளம் உண்டு. அந்த சமயத்தில் ரஜினி, கமலை ஓரம் கட்டும் அளவிற்கு விஜயகாந்தின் வெற்றிப் படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது.
இதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. படத்திற்காக மட்டும் அல்லாமல் தனிப்பட்ட முறையில் அவருடைய தங்கமான குணத்திற்காகவும் ஏராளமான ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர். தற்போது இவரைப் பற்றி தயாரிப்பாளர் சிவா ஒரு பேட்டியில் புகழ்ந்து பேசியுள்ளார்.
இவர் விஜயகாந்தை வைத்து பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, விஜயகாந்த் கிட்டத்தட்ட 175 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அந்த படங்கள் அனைத்திலும் அவர் சம்பள விஷயத்தில் எந்த கெடுபிடியும் காட்டியது கிடையாது. அந்த அளவிற்கு தயாரிப்பாளர்களுக்கு அவர் உதவி செய்தார்.
இன்று பல நடிகர்கள் சக நடிகர்கள் வளர்ந்து வருவதை பொறாமையுடன் பார்க்கின்றனர். ஆனால் விஜயகாந்த் அப்படி கிடையாது. ஒரு பெரிய நடிகராக ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டிருந்தாலும் அவர் வளரும் நடிகர்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்தார்.
அதனால்தான் அவர் அப்போது வளரும் நடிகராக இருந்த விஜய்யுடன் இணைந்து செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் அப்போது பெரிய அளவில் வெற்றி திரைப்படங்களை கொடுக்க முடியாமல் திணறி வந்த நடிகர் சூர்யாவுடன் இணைந்து பெரியண்ணா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இப்படி வளரும் கதாநாயகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதிலும், அவர்களை வளர்த்து விடுவதிலும் விஜயகாந்த் நிறையவே அக்கறை காட்டி இருக்கிறார். மேலும் இப்போது இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஓவர் பந்தா காட்டி வரும் போது விஜயகாந்த் அப்படி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரிடமும் அன்பாக பழகுவார். அதனால்தான் அவர் இன்றுவரை ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.