வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒருவழியாக தனது கனவு படத்தை முடித்த மணிரத்னம்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடந்து வந்த நிலையில், ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பில் பாகுபலி படத்தை போலவே மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம், ஜெய்ராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு என அனைவருமே திரை உலக ஜாம்பவான்கள் என்பதால் பொன்னியின் செல்வன் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுதவிர நடிகர் மற்றும் நடிகைகளின் கதாபாத்திரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பிடித்த நடிகர்களை அந்த கதாபாத்திரத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

படம் தொடங்கிய சமயத்தில் ஹைதராபாத், பாண்டிச்சேரி என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மத்திய பிரதேசத்திற்கு விரைந்தனர். அங்குள்ள மிகவும் பழமையான ஓர்ச்சா நகரம் அரண்மனை நகரம் என்றே அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அரண்மனைகளும், கோவில்களும் நிரம்பியுள்ள அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ps1-mani-rathinam
ps1-mani-rathinam

மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதை தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News