ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ரமேஷ் ராவ் எம் எஸ் பாஸ்கர் என அனைவரது நடிப்பும் வியக்க வைத்தது. இதில் செங்கேணி கதாபாத்திரத்தில் லிஜோமொல்தாமஸ், பார்வதி அம்மாள் பட்ட கஷ்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருந்தார்.
ஜெய்பீம் படத்திற்கு முதலமைச்சர் முதல் அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து. இதனால் பலரும் பார்வதி அம்மாவுக்கு உதவ முன் வந்தார்கள். நடிகர் சூர்யா பார்வதி அம்மாள் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கினார். நடிகரும் மற்றும் நடன இயக்குனருமான லாரன்ஸ் பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது. லாரன்ஸ் சில நாட்களுக்கு முன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்துள்ளார். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்தார்.
இந்நிலையில் லாரன்ஸ் முடிவை ஸ்டாலின் மாற்றியுள்ளார். லாரன்ஸ் வீடு கட்டி தருவதாக சொன்ன பார்வதி அம்மாளுக்கு தற்போது தமிழக அரசின் சார்பில் வீடு கட்டித் தரப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் லாரன்ஸ் தனது முடிவை மாற்றி உள்ளார்.
பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டுவதற்காக ஒதுக்கிய 5 லட்சம் பணத்துடன் 3 இலட்சம் சேர்த்து 8 லட்சமாக பார்வதி அம்மாள், அவரது மகள் மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கும் தலா 2 லட்சம் வழங்க லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். லாரன்ஸ் கொடுத்த வாக்கை அரசு செய்வதாக சொல்லியும், பார்வதி அம்மாளுக்கு லாரன்ஸ் உதவுவது மக்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.