அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். இவர் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றியவர். தற்போது முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆபரேஷன் AAAவை இன்று அதிகாரபூர்வமாக தொடங்கி உள்ளது. AAA என்றால் “ஆகஸ்ட் ஆக்சன் ஆரம்பம்” என்பதாம். தொடங்கிய முதல் நாளே அதிரடியாக கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.
இன்று அதிகாலையில் இருந்தே அவரின் வீடு, அலுவலகம், சொந்தமான இடங்கள் என்று 21 இடங்களில் தீவிரமாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்கும் பதிவு செய்துள்ளது.
முதல் கட்ட ரெய்டில் அவர் வருமானத்திற்கு புறம்பாக சொத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இவரை இன்றே வருமானவரித் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த நடவடிக்கை தொடக்கம்தான், இனிதான் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிகின்றன. இந்த லிஸ்டில் இருந்த முதல் நபர்தான் எம்ஆர் விஜயபாஸ்கர். இன்னும் பலர் லிஸ்டில் இருக்கிறார்களாம். எது எப்படியோ மொத்தத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.