தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் மனைவி ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழா நேற்று முன் தினம் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த விழாவில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு வீடியோ மூலமாக ஜானகி அம்மாவுடனான தனது சந்திப்பு, அனுபவங்கள் பற்றிப் பல விசயங்களைக் கூறினார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் பேசியதாவது:
”ஜானமி அம்மாவை நான் 3 முறை சந்தித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜானகி அம்மாவும் அரசியலில் இருந்து விலகிய காலக்கட்டத்தில், எம்ஜிஆரின் ராமாவரம் வீட்டில் அருகே தான் ஷூட்டிங் நடந்தது. அப்போது ஜானமி அம்மா என்னைச் சந்திக்க விரும்புவதாக கூறினார்கள்.
நான் நேரில் சென்று அவரைச் சந்தித்தேன். அவர் கையாலே எனக்கு காஃபி போட்டுக் கொடுத்தார்கள். அப்போது அவர், ராகவேந்திரா படம் வெளியானபோது, எம்ஜிஆர் அப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு 15 நிமிடம் உங்களைப் பற்றித்தான் பேசினார். எப்படி ரஜினி இத்தனை அமைதியாக, சாந்தமாக, அழகாக நடித்திருக்கிறார். படம் பார்க்கவே நன்றாக இருக்கிறது.
ஆனால், ரஜினி தன் படங்களில் சிகரெட் பிடிக்கிறார். அவருக்கு ரசிகர்கள் நிறையப் பேர் இருக்கும் நிலையில், அவர்களும் அதைப் பார்த்து அப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். இதை ரஜினி விட்டுவிட்டால் நன்றாக இருக்கும் நானும் நேரம் கிடைக்கும் போது இதைப்பற்றி அவரிடம் கூற முயற்சி செய்கிறேன் என்று தன்னிடம் எம்ஜிஆர் கூறியதாக ஜானகி அம்மா என்னிடம் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் – ரஜினி இடையே கருத்து வேறுபாடு இருந்ததா?
எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் அடுத்த தலைமுறை நடிகராக ரஜினிகாந்த், தனது நடிப்பிலு, ஸ்டைலிலும் ஒரு கரீஸ்மாவை உருவாகி, மக்களை கவர்ந்திருந்த சமயம். அப்போது ரஜினிக்கும், எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக பலரும் பலவிதமாக கூறினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மீது எம்ஜிஆர் எத்தனை அக்கறை கொண்டிருந்தார் என்பது ரஜினியின் இந்த வீடியோவில் தெரியவந்துள்ளது.